மக்களவை தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ள நிலையில், இந்தாண்டு நடைபெறும் மாநில தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.


தேசிய அளவில் கவனம் ஈர்த்த கர்நாடக தேர்தல்:


மூன்று மாநிலங்களிலும் பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நாடு முழுவதும் கவனம் ஈர்த்தது கர்நாடக தேர்தல். தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதி கொண்டதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.


இதில், காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135 இடங்களை கைப்பற்றியது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இருந்த பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை பெற்றாலும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது. 


கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது. இறுதியாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் தலையீட்டின் காரணமாக பிரச்னை முடிவுக்கு வந்தது.


முதலமைச்சராக சித்தராமையாவும் துணை முதலமைச்சராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். இச்சூழலில், நாளை கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மதியம் 12:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.


எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி:


ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை அமைத்து வரும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு பெரும் ஊக்கத்தை தந்துள்ளது. எனவே, இதை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன் முதல் முயற்சியாக கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


யார் யாருக்கெல்லாம் அழைப்பு?


காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி 
காங்கிரஸ் மூத்த தலைவரும் சத்தீஸ்கர் முதலமைச்சருமான பூபேஷ் பாகேல்
காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட்
காங்கிரஸ் மூத்த தலைவரும் இமாச்சல பிரதேச முதலமைச்சருமான சுக்விந்தர் சிங் சுகு
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன்
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி
உத்தர பிரதேச முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்
மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே
பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார்


இதில், பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விழாவில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.