பிஎஸ்எல்வி -சி 52 வாகனத்தின் மூலம் EOS 4- புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் ஏவுதளத்திலிருந்து, இன்று காலை 5 மணி 59 நிமிடத்திற்கு பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டன. இதற்கான கவுண்டன், கடந்த 13-ஆம் தேதி காலை மணி 4.29-க்கு தொடங்கியது.
பிஎஸ்எல்வி ராக்கெட், 1710 கிலோ எடையுள்ள புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை 529 கிலோமீட்டர் உயரத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் செலுத்துகிறது (synchronous polar orbit).
அனைத்து விதமான வானிலையிலும் ரேடார் படங்களை துல்லியமாக எடுக்கும் வகையில், புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS 4 வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், வனம், தோட்டங்கள், மண்வளம், நீர்வளம், வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட தகவல்களை இந்த செயற்கைக்கோள் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், INSPIREsat-1, INS-2TD என்ற இரண்டு கூடுதல் செயற்கோள்களையும் பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை 129 இந்திய செயற்கைக்கோள்கள், 36 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை (36 வணிக ரீதியிலான செய்ற்கைகோள்கள்) கடந்த 1975ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தி உள்ளது. செயற்கைகோள்கள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஏடிஎம், தொலைபேசி தொடர்பு, தொலைநிலை கல்வி, தொலைநிலை மருத்துவம், காலநிலை, வறட்சி மதிப்பீடு, நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளில் உதவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்