பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைகள நிறைவேற்றுவது தொடர்பாக நடைபெற்ற, மத்திய அரசு உடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவின. இதையடுத்து நேற்று முன் தினம் முதலே பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஷாம்பு பகுதியில், போலீசாரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், அங்கு பரபரப்பான சூழலும் ஏற்பட்டது.
ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் மூன்றாவது முறையாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மத்திய மந்திரிகள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளடு. இதில் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா நிர்வாகி தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்த கைவிடும்போது, வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக செல்வதாக விவசாயிகள் அறிவித்தனர். இதனால், 2021 ஆம் ஆண்டு சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்க்கூடாது என டெல்லி எல்லையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்டெய்னர்கள் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வாகனங்களின் டயர்களை பஞ்சராக்க சாலைகளில் ஆணிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு எல்லையில், 64 கம்பெனி துணை ராணுவப்படையினரும், 50 கம்பெனி ஹரியானா போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, காக்கர் ஆற்றுப்படுகையில் பள்ளங்களும் தோண்டட்டுள்ளன. ட்ரோன்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இவற்றை எல்லாமும் மீறி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் அடங்குவர்.