ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி - அதிபர் நஹ்யான் இடையே பல்வேறு துறைசார் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


இதனையடுத்து டெல்லி ஐஐடியின் அபுதாபி வளாகத்தின் முதலாவது பிரிவு மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு என்பது இரண்டு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைப்பதாக தெரிவித்தார். முன்னதாக பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் இந்தப் பயணத்தின்போது, அபுதாபியில் முதலாவது இந்து ஆலயத்தையும் திறந்து வைக்க உள்ளேன் என தெரிவித்திருந்தார். 






அதன்படி, 27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS கோயில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து  வைக்கப்பட்டது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படும் சுவாமி நாராயண், திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன. இதனையடுத்து ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்த பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக கத்தார் புறப்பட்டு சென்றார். 


4வது முறையாக அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை தோஹா விமான நிலையத்தில் கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் சோல்தான் பின் சாத் அல்-முரைக்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் பிரதமர் மோடி சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி மற்றும் நிதி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில் , “பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் ஒரு அற்புதமான சந்திப்பு நிகழ்ந்தது. எங்களின் விவாதங்கள் இந்தியா-கத்தார் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.