அபுதாபியின் முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கோவில் மிகப்பெரிய கோவிலாக உள்ளது. இங்கு கோவில் கட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய அமீரக நாடு நிலம் வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 

Continues below advertisement

27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS கோயில், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயண் (கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது), திருப்பதி பாலாஜி மற்றும் ஐயப்பா உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் உள்ளன. ஏழு ஷிகர்களும் அதாவது கோபுரங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கின்றன." BAPS இன் தலைவர் பிரம்மவிஹாரிதாஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

இந்த கோவிலைத் திறந்து வைத்த பிரதமர் மோடி தனது உரையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பொற்கால அத்தியாயத்தை எழுதியுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா பல வருட கடின உழைப்பு மற்றும் பலரின் கனவுகளால் இணைக்கப்பட்டுள்ளது. சுவாமிநாராயணின் ஆசீர்வாதமும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், இதுவரை புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் இதர ஹைடெக் கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம், தற்போது மற்றொரு கலாச்சார அத்தியாயத்தை தனது அடையாளத்தில் சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

அதேபோல் அவர், வரும் காலங்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும், மேலும் அவர்களுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் தொடர்பும் அதிகரிக்கும். இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் சார்பில், ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், ஐக்கிய அ எமிரேட் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.