பிரமோஸ் ஏவுகணைத் திட்டம் 75 சதவீத உள்நாட்டுத் திறனை எட்டியுள்ளதாக பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறியுள்ளார்.






பிரமோஸ் ஏவுகணை:


சென்னையைச் சேர்ந்த தனியார்  நிறுவனம் தரப்பில் சிறுசேரியில் உள்ள ஆலையில் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸுக்கு ‘பிரம்மோஸ் ஏவுகணை சோதனைக் கருவி’ 27வது முறையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதுல் தினகர் ரானே சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். பிரம்மோஸ் ஏவுகணை 2004ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்த போது 13 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உதிரி பாகங்கள் இருந்தன. ஆனால் கடந்த 19 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரித்துள்ளது என பிரபல விஞ்ஞானியும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறியுள்ளார்.


100 சதவீதம் முடியாது:


ஆனால் 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இந்த ஏவுகணையை தயாரிக்க முடியாது. ஏனெனில் பிரம்மோஸ் ஏவுகணை என்பது ரஷ்யா மற்றும் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் கூட்டு திட்டமாகும். மேலும் ரஷ்யாவின் ஒரு சில தொழில்நுட்பங்களை நாம் சார்ந்துள்ளதால் 100 சதவீதம் எட்ட முடியாது என தெரிவித்தார். பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்பது இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் ‘மிலிட்டரி இன்டஸ்ட்ரியல் கன்சார்டியம்’ என்பிஓ மஹினோஸ்ட்ரோயெனியா (‘Military Industrial Consortium’ NPO Mahinostroyenia)ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரிக்க கடந்த 1998-ம் ஆண்டு ஒப்பந்தம்செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.


சில தொழில்நுட்பங்கள் இன்னும் ரஷ்யாவால் வழங்கப்பட்டு வருவதாகவும், அவற்றை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டம் தற்போது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.  75 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பங்களால், பிரம்மோஸ் ஏவுகணையின் ஒட்டுமொத்த விலை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் ரானே கூறினார்.  


டேட்டா பேட்டர்ன்ஸ் (இந்தியா) லிமிடெடின் அதிகாரி ஸ்ரீனிவாசகோபாலன் ரங்கராஜன் கூறுகையில், இந்த நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாகவும் தற்போது பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறை தேவைகளுக்கான ரேடார்களை வடிவமைத்து உற்பத்தி செய்து வருவதாகவும்” கூறினார். மேலும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட நிறுவனத்திற்கும் பிரம்மோஸ் ஏவுகனைக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.  “ஆனால் இவை உண்மையான ஏற்றுமதிகள் அல்ல. முழு உபகரணங்களையும் இந்தியாவில் உருவாக்கி, பாதுகாப்பு அமைச்சகத்திடம் கொடுத்து, அரசாங்கத்தின் அனுமதியுடன் உலகின் பிற பகுதிகளுக்கு வழங்குவதே உண்மையான ஏற்றுமதியாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.  


இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதன்படி வரும் 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் ரூ.41,500 கோடி வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.