வாரணாசி ஞானவாபி மசூதி விவகாரம், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி - ஷாஹி ஈத்கா விவகாரம் என நீண்ட காலமாக இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாக இருந்த இடங்களை இந்து வலதுசாரி அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வழக்கு தொடுத்து வரும் நிலையில், இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றுப் பேராசிரியர்களுள் ஒருவரான இர்பான் ஹபீப், கடந்த காலங்களில் மசூதியோ, கோயிலோ கட்டப்பட்ட இடங்களில் பௌத்த விகாரங்களின் கற்களும் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பெற்றவரும், தற்போது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற் பேராசிரியருமான இர்பான் ஹபீப் தொடர்ந்து, பௌத்த விகாரங்கள் கிடைத்த இடங்களில் உள்ள கோயில்களும், மசூதிகளும் இடிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முகலாய மன்னர் ஔரங்கசீப் கோயில்களை இடித்ததை உறுதி செய்துள்ள பேராசிரியர் இர்பான் ஹபீப், தற்போதைய அரசு என்ன தவறுகளைச் செய்யப் போகிறது என ஞானவாபி மசூதி சர்ச்சை குறித்து கூறியுள்ளார்.
`கடந்த 1992ஆம் ஆண்டு, அயோத்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதை நீங்கள் எப்படி புரிந்துகொண்டாலும் சரி, கோயில் கட்டுவதற்கான பாதை அதனால் உருவானது. உச்ச நீதிமன்றமும் இடம் வழங்கிவிட்டது. இதே போன்று இனியும் தொடரும்’ எனக் கூறியுள்ளார் பேராசிரியர் இர்பான் ஹபீப்.
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களின் தயாரிப்புக்காக ஞானவாபி மசூதி விவகாரம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகிறதா எனப் பேராசிரியர் இர்பான் ஹபீபிடம் கேட்ட போது, `எனக்கு தெரியாது. நான் வரலாற்று ஆய்வாளன்.. எதிர்காலத்தில் நடைபெறுவது உங்களின் பொறுப்பு’ எனக் கூறியுள்ளார்.
முகலாய மன்னர் ஜஹாங்கீரின் ஆட்சிக் காளத்தின் போது, ராஜா வீர் சிங் பண்டேலா பனாரஸ், மதுரா ஆகிய பகுதிகளில் கட்டிய கோயில்கள் ஔரங்கசீப் காலத்தின் போது இடிக்கப்பட்டதாகக் கூறியுள்ள பேராசிரியர் இர்பான் ஹபீப், `1670ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இடத்தை இன்று தகர்க்க முடியுமா? இது பண்டைய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிரானது’ எனவும் கூறியுள்ளார்.
மேலும், அவர் ஞானவாபி மசூதி விவகாரத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக சர்ச்சை எழுந்து வரும் நிலையில், அது ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுவின் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து, `ஏதேனும் ஒன்றை சிவலிங்கம் என அழைக்க வேண்டும் எனில் அதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சிவலிங்கம் என்று அழைக்க முடியாது’ எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு எழுந்துள்ள சர்ச்சைகளை முட்டாள்தனமானவை எனக் கூறியுள்ள பேராசிரியர் இர்பான் ஹபீப், `சித்தூரின் ரானா கும்பாவில் மிகப் பெரிய கோபுரம் ஒன்று இருக்கிறது. அதன் இருபக்கங்களில் உள்ள கற்களிலும் பெரிதாக அரேபிய மொழியில் `அல்லாஹ்’ என்று எழுதப்பட்டுள்ளது. இதை முஸ்லிம்கள் மசூதி எனக் கூறி, உரிமை கொண்டாட முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.