டெல்லியின் சாகேத் பகுதியில் உள்ள கிளை நீதிமன்றம் ஒன்று சுமார் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள குதுப் மினார் பகுதியில் இடிக்கப்பட்ட இந்து, சமண கோயில்களுக்கு மீட்புப் பணி வேண்டும் என்ற கோரிக்கை மனு மீது விசாரணை மேற்கொண்டுள்ளது. 


டெல்லியில் பிரபல சுற்றுலா தளமாக இருக்கும் குதுப் மினார் வளாகத்தில் இந்து மதக் கடவுள்களை வணங்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையில், டெல்லி நீதிமன்ற நீதிபதி, `சுமார் 800 ஆண்டுகளாக அங்குள்ள கடவுள்கள் எந்த வழிபாடும் இல்லாமல் பிழைத்திருக்கிறார்கள்; அவர்கள் அப்படியே பிழைக்கட்டுமே’ எனத் தெரிவித்துள்ளார். 


மனுதாரரின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின், `ஒரு சிலை உடைக்கப்பட்டால், அது அதன் புனிதத்தன்மையை இழப்பதில்லை. மேலும், குதுப் மினார் வளாகத்தில் சிலைகள் இருக்கின்றன. சிலைகள் முழுமையாக இருக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, வழிபாட்டுக்கான உரிமை நிலவுகிறது’ எனக் கூறியுள்ளார். 



தன் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் கூறிய போது, டெல்லி நீதிமன்ற நீதிபதி, `வழிபாட்டு உரிமைப் பொது ஒழுங்கைக் காப்பாற்ற தடை செய்யலாம்’ எனக் கூறியுள்ளார். 


சமீபத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் பகுதி இயக்குநர் தரம்வீர் ஷர்மா சமீபத்தில் குதுப் மினார் என்பதை இந்து மன்னரான ராஜா விக்ரமாதித்யா சூரியத் திசையை ஆய்வு செய்வதற்காக கட்டினார் எனவும், குதுப் அல்தீன் ஐபக் என்ற டெல்லி சுல்தான் மன்னர் அதனைக் கட்டவில்லை எனவும் கூறிய பிறகு இந்த சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே இந்து வலதுசாரி அமைப்புகள் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை இந்து வழிபாட்டுத் தலமாக மாற்றக் கோரி வரும் நிலையில், குதுப் மினார் மீதான சர்ச்சையும் பிரபலமாகியுள்ளது. 


மேலும், குதுப் மினார் வளாகத்தில் பல்வேறு இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 



இவை ஒரு பக்கம் இருக்க, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் சமீபத்தில் குதுப் மினார் என்பது `விஷ்ணு ஸ்டம்ப்’ என்ற இந்து வழிபாட்டு இடம் எனவும், அந்த வளாகத்தில் அமைந்துள்ள குவ்வத்துல் இஸ்லாம் மசூதி கட்டுவதற்கான பொருள்கள் சுமார் 27 இந்து, சமண மதக் கோயில்களை இடித்து எடுக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். 


இந்நிலையில், தற்போது டெல்லி நீதிமன்றத்தில் குதுப் மினார் வழக்கு மீதான விசாரணையில், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், குதுப் மினார் பகுதியில் கோயில்களைத் திறப்பதற்காக மனுவை எதிர்த்துள்ளது. 


கடந்த 1914ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளமாக குதுப் மினார் இருப்பதாகக் கூறியுள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை, `பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் அவை குறிப்பிடப்படும் போது இல்லாத வழிபாட்டைத் தற்போது அனுமதிக்க முடியாது’ என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.