தலிபான்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பேசிய விவகாரத்தில் உத்திரப்பிரதேச எம்.பி. ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலிபான்கள் ஆஃப்கானிஸ்தான் தலைநகரைக் கைப்பற்றியதை அடுத்து சர்வதேச நாடுகள் அங்கே தங்கியிருக்கும் தனது நாட்டு மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மையினர்கள் மற்றும் அந்த நாட்டுக்கான இந்திய தூதர் உட்பட பலரை ஏற்றிக்கொண்டு குஜராத் வந்து சேர்ந்தது. மக்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்து பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவும் கூடி இன்று ஆலோசனை செய்தது. இதற்கிடையேதான் தற்போது உத்திரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஷஃபிக்கர் ரஹ்மான் தலிபான்களுக்கு ஆதரவாகப் பேசியதாக அவர்மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஷஃபிக்கர் ரஹ்மான் தலிபான்களை சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பீடு செய்ததாகக் கூறப்படுகிறது.நேற்று நள்ளிரவு ஷஃபிக்கர் மீது வழக்கு பதியப்பட்டதாகவும் தலிபான்களின் வெற்றியை இவர் கொண்டாடியதால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அந்த மாநிலத்தின் சம்பல் மாவட்ட எஸ்.பி. இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். 





இந்தியாவைப் பொறுத்தவரை தலிபான்கள் தீவிரவாத அமைப்பு. அதனால் அவர்கள் குறித்தான இந்த கருத்து தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார். 


கடந்த திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய ஷஃபிக்கர் ரஹ்மான், ‘தலிபான்கள் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடமிருந்தான விடுதலையை விரும்பினார்கள். அவர்கள் நாட்டை அவர்களே ஆள விரும்புகிறார்கள். இது உள்நாட்டு விவகாரம் இதில் நாம் எப்படித் தலையிட முடியும்? நமது நாட்டை பிரிட்டிஷ் ஆட்சி செய்தபோது நாம் போராடவில்லையா? அப்படித்தான் என அவர் கூறியதாகச் சொல்லப்படுகிறது.


இதற்கிடையே தான் அவ்வாறு சொல்லவில்லை என்றும் தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் இன்று விளக்கமளித்துள்ளார் ஷஃபிக்கர் ரஹ்மான். 






அவரது விளக்கத்தில்,’தலிபான்களை நமது நாட்டுச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு நான் எதுவுமே பேசவில்லை. நான் சொன்ன கருத்து தவறாகப் பதியப்பட்டிருக்கிறது.நான் இந்தியாவின் குடிமகன். ஆஃப்கானிஸ்தான் பிரஜை அல்ல.அங்கு நடப்பது குறித்து கவனிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. நான் எனது அரசின் கொள்கைகளை பின்பற்றுகிறேன்’ எனக் கூறியுள்ளார். இதனை விமர்சித்துள்ள உத்திரபிரதேச துணை முதல் கேசவ் பிரசாத் மௌர்யா எம்.பி.யின் கருத்தை பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கருத்துடன் ஒப்பிட்டுள்ளார். ஆஃப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை தலிபான் 10 தினங்களில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.