சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தான் அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் மத்திய அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
டெல்லியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷம செயல்:
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை அதன் ஆதரவாளர்கள் சிலர் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரையில், தேசிய தலைநகர் டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரிகள், உறுப்பு நாடுகளை தவிர்த்து விருந்தினர் நாட்டு பிரதிநிதிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்தது என்ன?
இந்த உச்சி மாநாடு, உலக அளவில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் உள்ள 5 மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில் காலிஸ்தானிகளுக்கு ஆதரவான கோஷங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறுகையில், "இது சட்டம் ஒழுங்கு பிரச்னை. டெல்லி காவல்துறைக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.
இது தொடர்பாக டெல்லி காவல்துறை தரப்பு பேசுகையில், "இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் சுவர்களில் காலிஸ்தானி ஆதரவு வாசகங்கள் எழுதப்படும் காட்சிகளை நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
சிவாஜி பார்க், பஞ்சாபி பாக் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் காலிஸ்தான் சார்பு கோஷங்களை எழுதியுள்ளனர். பொய்யான தகவல்கள் மற்றும் எரிச்சலூட்டும் கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்கவும், விஷமிகளை அடையாளம் காணவும், மால்கள், சந்தைகள் மற்றும் மதத் தளங்களில் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும் டெல்லி காவல்துறை சமூக ஊடகங்களைக் கண்காணித்து வருகிறது.
டெல்லிக்குள் விஷமிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுக்க சீல் வைக்கப்படும். ஆனால், வழக்கமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட அனுமதிக்கப்படும்.
உச்சிமாநாட்டின் போது ஏதேனும் மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்ள மொத்தம் 80 மருத்துவக் குழுக்கள் மற்றும் 130 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், 60 துணை போலீஸ் கமிஷனர்களுக்கு (டிசிபி) உச்சிமாநாடு தொடர்பான குறிப்பிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிடம் தெரிவிக்கப்பட்டது.