உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களிடம் இஸ்லாமிய மாணவனை தாக்கச்சொல்லும் ஆசிரியரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளி ஆசிரியர் மீது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முசாஃபர்நகரில் உள்ள நேஹா பப்ளிக் பள்ளியின் முதல்வராக இருக்கும் திரிப்தா தியாகி, 7 வயது சிறுவனை அடிக்கும்படி மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட அந்த சிறுவன் கண்ணீருடன் உதவியற்ற நிலையில் நின்றுகொண்டிருந்தது வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திரிப்தா தியாகி தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறிகையில், “தனது இந்த மோசமான செயலுக்கு வெட்கப்படவில்லை, நான் இந்த கிராம மக்களுக்கு ஆசிரியராக சேவை செய்துள்ளேன். அவர்கள் அனைவரும் என்னுடன் இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். மேலும் பள்ளியில் இருக்கும் குழந்தைகளை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த செயலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்து பேசிய அவர், இந்த சம்பவம் ஒரு சிலர் வேண்டுமென்றே ஊதி பெரிதாக்குகிறார்கள் என பேசியுள்ளார்.


இந்த வீடியோ குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு சத்யநாராயண் பிரஜாபத், “மன்சூர்பூர் காவல் நிலையத்தில் -  ஒரு பெண் ஆசிரியர், தனது வகுப்பில் படிக்கும் மாணவனை கணக்கு பாடம் படிக்காததற்காக, மாணவர்கள் அடிக்கும்படி கூறிய ஒரு வீடியோ கிடைத்தது. சில ஆட்சேபகரமான கருத்துக்கள் இருந்தது வீடியோவிலும் பதிவாகியுள்ளது” என குறிப்பிட்டார். இது தொடர்பாக அந்த ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  


அரவிந்த் மல்லப்பா பங்கரி, மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ அந்த சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.  


இதற்கிடையில், வைரலான வீடியோவுக்கு பதிலளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனித இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது - ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு இதைவிட மோசமான எதையும் செய்ய முடியாது. இதே மண்ணெண்ணையை பாஜகவினர் பரப்பி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் தீக்கிரையாக்கியுள்ளனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம் - அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் சேர்ந்து அன்பை கற்பிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  


Chandrayaan 3: வெற்றி.. 3 இலக்குகளில் 2 இலக்குகளை அசால்டாக செய்த சந்திரயான் 3.. அப்போ 3வது இலக்கு என்ன ஆனது?