பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. 
உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 3,500 குழந்தைகள் உள்பட 7,703 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதுவரையில், வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், நிலத்தின் வழியேயும் தாக்குதலைத் தொடங்கியிருப்பதும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.


உலக நாடுகளை கொந்தளிப்பில் ஆழ்த்திய காசா போர்: 


காசாவில் நடந்து வரும் போரால் உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு டிரக் மூலம் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை ஐநா வழங்கி வந்தது. ஆனால், தற்போது எரிபொருள் காலியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அவசர உதவி தடைபடும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளது.


இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்த போதிலும், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் தவிர்த்துள்ளது.


இதற்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கண்ணுக்கு கண் என பழிவாங்கினால், உலகமே குருடாகிவிடும் என்ற மகாத்மா காந்தியின் வாக்கியத்தை மேற்கோள் காட்டி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.


பிரியங்கா காந்தி விமர்சனம்:


இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் நமது நாடு புறக்கணித்திருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. வெட்கப்படுகிறேன்.


நமது நாடு அகிம்சை மற்றும் உண்மையின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டது. நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்த கொள்கைக்காக தான் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். இந்த கொள்கைகளே, நமது தேசத்தை வரையறுக்கும் அரசியலமைப்பின் அடிதளத்தை உருவாக்குகின்றன.


சர்வதேச சமூகத்தின் உறுப்பினராக அதன் நடவடிக்கைகளை வழிநடத்திய இந்தியாவின் தார்மீக தைரியத்தை அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.


மனித குலத்தின் அடிப்படை சட்டம் ஒவ்வொன்றும் தூள் தூளாக்கப்படுவதையும், உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள், தகவல் தொடர்பு, மின்சாரம் போன்றவை பல லட்சக்கணக்கான மக்களுக்குத் துண்டிக்கப்படுவதையும், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அழிக்கப்படுவதையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பது நமது தேசத்தின் கொள்கைக்கு எதிரானது" என பதிவிட்டுள்ளார்.