பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 7ஆம் தேதி மோதல் தொடங்கியது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.


போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கோரி உலக நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இஸ்ரேல் முனைப்பு காட்டி வருகிறது.


போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக திரண்ட உலக நாடுகள்:


இந்த நிலையில், காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜோர்டான் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான நாடுகளின் ஆதரவு கிடைத்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக பிரேசில், சீனா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட 120 நாடுகள் வாக்களித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களித்தன.


இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைபாடு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்றால், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை கண்டித்திருந்தாலும் இரு நாட்டு கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபரிடம் மஹ்மூத் அப்பாஸிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.


இப்படிப்பட்ட சூழலில், போர் நிறுத்தம் கோரிய தீர்மானத்திற்கு ஆதரவளிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானத்தை புறக்கணித்ததற்கு விளக்கம் அளித்து பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் யோஜனா படேல், "தீர்மானத்தில் ஹமாஸ் குறித்து குறிப்பிடப்படவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.


தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா:


இந்த பேரவையில் நடந்த விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிரான தெளிவான செய்தியை அனுப்பும். அது மட்டும் இன்றி, மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, ராஜதந்திரம் மற்றும் உரையாடலுக்கான வாய்ப்புகளை இந்த விவாதம் விரிவுபடுத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சிகரமானவை. கண்டனத்துக்கு உரியவை. பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை நினைத்து வருந்து வருகிறோம். அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


பயங்கரவாதம் கொடிய விஷயம். அதற்கு, எல்லைகள், தேசியம், இனம் என எதுவும் தெரியாது. பயங்கரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க முடியாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றுபடுவோம். பயங்கரவாதத்திற்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம்" என்றார்.


இதையும் படிக்க: நேரம் நெருங்கிட்டு இருக்கு.. நிறைய பேர் இறந்துடுவாங்க.. பாலஸ்தீனியர்கள் நிலைமை பற்றி ஐநா அதிர்ச்சி!