டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


மல்யுத்த வீரர்கள் போராட்டம்:


பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியும், குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷனுக்கு எதிராக போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மல்யுத்த வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். திறப்பு விழா நடைபெறும் இன்று, 'மஹிளா மகாபஞ்சாயத்' என்ற பெயரில் புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல மல்யுத்த வீரர், வீராங்கனைகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


கொந்தளித்த பிரியங்கா காந்தி:


இதனை தொடர்ந்து, தடையை மீறி மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது, காவல்துறை தடுப்புகளை தாண்டி அவர்கள் பேரணியை தொடர முயன்ற போது அவர்களை காவல்துறை சிறைபிடித்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செற்றனர். 


இதனால் அப்பகுதி களேபரமாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட முன்னணி வீரர்களான வினேஷ் போகாத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் இந்த கைது நடவடிக்கைக்கு ஆளாகினர். நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களை காவல்துறை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "வீரர்களின் நெஞ்சில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களால், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பால், நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது.


பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது வீராங்கனைகளின் குரலை அரசாங்கம் இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. அரசின் இந்த அநீதியை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.


மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 


மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.


குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?" என பதிவிட்டுள்ளார்.