கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இருந்தபோதிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே, அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி. குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால், ஆட்சி அமைத்த 14 மாதங்களிலேயே, ஆளும் கூட்டணியின் 16 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து, கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து, எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார். ஆனால், எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி பாஜக உயர் மட்ட தலைவர்கள் எடியூரப்பாவை கேட்டு கொண்டதாக கூறப்பட்டது.
இறுதியில், முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக, பசவராஜ் பொம்மைக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, பாஜக அரசு மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கர்நாடகாவில் வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பாஜகவை தோற்கடித்து ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முக்கிய தேர்தல் வாக்குறுதி ஒன்றை காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் நடந்த மாநாடு ஒன்றில் இன்று கலந்து கொண்டு பிரியங்கா காந்தி, "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 2 ரூபாய் வழங்கப்படும்" என வாக்குறுதி அளித்துள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், "இந்த வாக்குறுதி காங்கிரஸ் பொது செயலாளரால் கர்நாடகாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படுகிறது" என அவர் பேசியுள்ளார். கிரஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் 1.5 கோடி இல்லதரசிகள் பயன் பெறுவர் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.