priyanka gandhi: பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. 


பணமோசடி வழக்கில் பிரியங்கா காந்தி:


பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல். பஹ்வா என்பவரிடமிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 40 கனல் (ஐந்து ஏக்கர்) அளவிலான விவசாய நிலத்தை வாங்கி, அதே நிலத்தை பிப்ரவரி 2010 இல் அவருக்கு விற்றதில் பிரியங்கா காந்தியின் பங்கு இருப்பதாக  குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது.


குற்றப்பத்திரிகை சொல்வது என்ன?


அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, ஃபரிதாபாத்தின் அமிபூர் கிராமத்தில் உள்ள நிலம் பஹ்வாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அதே முகவரிடமிருந்து தான் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவும் 2005ஆம் ஆண்டில் அமிபூரில் 40.08 ஏக்கர் அளவிலான மூன்று துண்டு நிலத்தை வாங்கி அதே நிலத்தை டிசம்பர் 2010ம் ஆண்டில் அதே நபருக்கு விற்றுள்ளார்.   






பெரும் சிக்கலில் பிரியங்கா?


2016ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு தப்பியோடிய ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி,  பணமோசடி, அந்நியச் செலாவணி மற்றும் கருப்புப் பணச் சட்டங்களை மீறுதல் ஆகியவற்றிற்காக பல ஏஜென்சிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  இங்கிலாந்தைச் சேர்ந்த சுமித் சாதாவுடன் குற்றச் செயல்களில் ஈடுபட்டதை மறைத்து பண்டாரிக்கு உதவியதாக, சிசி தம்பி வெளிநாட்டு வாழ் இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கும் பிரியங்கா காந்திக்கு நிலத்தை விற்றுக்கொடுத்த பஹ்வா தான் நிலத்தை விற்றுக்கொடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே ராபர்ட் வதோத்ராவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருந்த நிலையில், தற்போது அதில் பிரியங்கா காந்திய்ன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அவரும் விரைவில் விசாரணை வளையத்திற்குள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


ஆம் ஆத்மி கருத்து:


இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதையும், எங்கள் தலைவர்கள் சிறையில் இருப்பதையும் நாங்கள் பார்த்து வருகிறோம். நிரபராதி என நிரூபிக்கப்படும் வரை குற்றவாளி' என்ற சட்டம் எதிர்க்கட்சிகளுக்கும் பொருந்தும். , 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி' என்ற சட்டம் நாடு முழுவதும் பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.