Dahra Global Case Qatar: மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மூலம், 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கத்தார் நாட்டில் உள்ள அல் தாஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இவர்கள் கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம் அவர்களது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை:
இதுதொடர்பாக பேசியுள்ள வெளியுறவு அமைச்சகம், “தஹ்ரா குளோபல் வழக்கில் கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம், அதில் தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன. விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். கத்தாருக்கான எங்கள் தூதர், பிற அதிகாரிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இன்று நடைபெற்ற விசாரணையில் கலந்து கொண்டனர். இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம். அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். மேலும் நாங்கள் கத்தார் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கையை தொடருவோம்” என தெரிவித்துள்ளது.
வழக்கு விவரம்:
கத்தார் நாட்டில் உள்ள அல் தாஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். அந்நிறுவனம் ஆயுதப்பயிற்சி மற்றும் பாதுகாப்பு வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான தண்டனைக்கு ஆளான 8 பேரும் பணியாற்றி வந்தனர். தோஹாவில் உள்ள அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர்கள் கத்தார் நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பாக தகவல்களை திரட்டி இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கத்தார் நாடு பாதுகாப்பு படையினர் அவர்கள் 8 பேரையும் கைது செய்ய, நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இது இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, மரண தண்டனைக்கு ஆளான 8 இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
வழக்கு மேல்முறையீடு:
கத்தார் நீதிமன்றத்தில் 8 பேரின் மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்திய அரசின் மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்நிலையில், 8 பேரின் மரண தண்டனைக்கு எதிரான இந்திய அரசின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.