காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி.


தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.


இந்நிலையில், பெண்கள் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, அவர்களது மகள் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று நடந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளனர்.


ராஜஸ்தான் பூண்டி மாவட்டத்தில் உள்ள பாபாய் பகுதியில் தேஜாஜி மகாராஜ் மண்டியில் இருந்து காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த நடைபயணத்திற்கு பெண்கள் சக்தி நடைபயணம் என அழைக்கப்பட்டது.


இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கத்தில் இருந்தே நடைபயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் ராவ், "இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 96ஆவது நாளன்று பெண்கள் சக்தி பாத யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.


வழிபாடு மேற்கொண்டு, தேசிய கீதம் பாடி, தேசிய பாடல் மற்றும் கொடியேற்றத்திற்கு பிறகு காலை 6 மணியளவில் பாபாய் கிராமத்தில் உள்ள தேஜாஜி மகாராஜ் கோவிலில் இருந்து தொடங்கியது. ஏராளமான பெண்கள் சாலையோரத்தில் நின்று யாத்திரிகர்களை வரவேற்று பேரணியில் கலந்து கொண்டனர்" என்றார்.


 






கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணம், இன்னும், 1, 500 கிலோமீட்டர் மேல் செல்ல உள்ளது. இது அடுத்த ஆண்டு காஷ்மீரில் முடிவடைகிறது. இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல் தலைவரும் மேற்கொண்டிராத மிக நீண்ட நடைப்பயணம் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. வரவிருக்கும் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைந்து தொண்டர்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


முன்னதாக, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து விமர்சித்த ராகுல் காந்தி, "சீன ராணுவத்தால் கூட இந்தியாவுக்கு செய்ய முடியாததை, பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி கொளை மூலம் செய்து முடித்துள்ளனர்" என கூறி இருந்தார்.


மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை குறைக்கப்பட்ட பிறகும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏன் குறைக்கப்படவில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார்.