தற்போதைய இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக பிரியங்கா காந்தி உருவெடுத்து வருகிறார். தற்போது, உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளாராக இருந்து வரும் இவரது தலைமையில், 2022 உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கிறது காங்கிரஸ். 


இந்திய ஜனநாயகத்தின் எழுதப்படாத விதியாக வாரிசு அரசியல் இருந்தாலும், பிரியங்கா காந்தியின் அரசியல் வருகையை வாரிசு அரசியல் என்பதற்குள் மட்டும் சுருக்கி விட முயுயாது. ஜனநாயகத்தில், வரலாற்று  ரீதியிலான சாத்தியக் கூறுகள் இல்லாமல், வாரிசு அரசியல் செயல்பட முடியாது. 



ப்ரியங்கா


 


இந்திரா காந்தியையே எடுத்துக்கொள்ளலாம்.. இந்திரா காந்தியின் அரசியல் வருகை இந்திய அரசியல் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. இப்போதும் பலருக்கு அவர் அனல் கக்கும் ஆளுமைதான். நேருவின் மகள் 'இந்திரா' என்பதால் மட்டும் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடவில்லை. தொடக்க காலத்தில், தெளிவான வலுவான அரசியல் நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருக்கவில்லை. மாறாக, சாஸ்திரி  மறைவுக்குப் பிந்தைய அரசியல் நெருக்கடிகள், மொரார்ஜி தேசாயின்  தீவிர முதலாளித்துவ கொள்கை பிடிப்புகள், நாட்டில் தலைதூக்கிய வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றை சமாளிக்கவே இந்திரா காந்தி அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எனவே, வாரிசு அரசியல் செயல்படுவதற்கும் ஒரு அரசியல் களம் வேண்டும். 


அதைப்போலவே ஒரு அரசியல் களம் ப்ரியங்கா காந்திக்கும் அமையும் என்பதுதான் அரசியல் விமர்சகர்கள் பலரின் கருத்தாக இருந்துவருகிறது.



பிரியங்கா காந்தியின் அரசியல்: 


உத்தர பிரதேச அரசியலில் பெண்களின் குரலாக பிரியங்கா மாறி வருகிறார். வரும், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 40% பேர் பெண்களே  இருப்பார்கள் என்ற அவரின் சமீபத்திய முடிவு பலரையும் திருப்பி பார்க்கவைத்துள்ளது.  இந்தியாவின், சமீபத்திய தேர்தல் முடிவுகளை பெண் வாக்காளர்களே தீர்மானித்து வருகின்றனர். உதாரணமாக, ஜெயலலிதா, மாயாவதி, நிதிஷ் குமார், சிவராஜ் சவுகான், மெகபூபா முப்தி போன்ற அரசியல் தலைவர்களின் வெற்றிக்குப் பின்னால் பெண் வாக்காளர்களின் முக்கிய பங்கு வகித்தது. 


பெண்களின் அரசியல் சக்தி ப்ரியங்கா காந்தியை காலத்தின் ஏணியில் ஏற்றுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.


எதுவாகினும், புத்த மதத்தில் அவருக்கு இருக்கும் புரிதலும், கையை உயர்த்தி காவலரைக் கண்டிக்கும் துணிச்சலும், ஹத்ராஸில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட மகளை நினைத்து கதறிய பெற்றோரை அணைத்தபோது ப்ரியங்கா காட்டிய அரவணைப்பும் அவரது தனிப்பட்ட ஆளுமையை உலகுக்கு எடுத்துக் காட்டின.


வாழ்த்துகள் ப்ரியங்கா.!