நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து வயநாடு மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசு எடுக்கமால் மக்கள் நலனை புறக்கணிப்பதாக பிரியங்கா காந்தி தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். 


வயநாடு இடைத்தேர்தல் பிரியங்கா காந்தி:


2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். காலியான வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். வரும் நவம்பர் 13ஆம் தேதி, வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறகிறது. இந்நிலையில், வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி தீவிர பரப்புரை செய்து வருகிறார்.  






பிரியங்கா ரோட் ஷோ முடிந்து  Eengapuzha பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசுகையில்,” வயநாடு மக்களே நீங்கள் இந்தியாவிற்கே வழிக்காட்டியாக இருந்தீர்கள். என் சகோதரர் ராகுல் காந்தியின் போராட்டத்தை நீங்கள்தான் முதலில் அங்கீகரித்தீர்கள். அவருக்கு உறுதுணையாக இருந்தீங்க. எல்லாம் அவருக்கு எதிராக இருந்த காலத்தில் அவரை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற செய்தீர்.” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். 


வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவினால் நிகழ்ந்த பாதிப்புகளுக்கு மத்திய அரசு எந்த நடவடிகையும் எடுக்காமல் இருப்பது குறித்து பேசுகையில்,” வயநாடு மக்களின் மீது மத்திய அரசிற்கு கொஞ்சமும் மரியாதை இல்லை. அது நிலச்சரிவு பாதிப்புகளில் இருந்து மீள்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதில் இருந்தே தெரிகிறது. பிரதமர் ஆறு தொழில்துறை நண்பர்களுக்கு மட்டுமே உறுதுணையாகவும் நன்மைகள் செய்பவராகவும் இருக்கிறார். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு எந்த நிவாரண உதவியும் அறிவிக்கவில்லை. விவசாயிகளுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை.” என்று சாடியுள்ளார்.


மேலும், விவசாயிகளில் நலனில் அக்கறை இல்லை, பழங்குடியினர் விசயத்தில் எந்த நடவடிக்கையில் இல்லை, பொதுமக்களின் நலனை கண்டுக்கொள்ளாமல் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை வழங்கி வருகிறது மத்திய அரசு என்றும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி அரசு பற்றி தெரிவிக்கையில்,” மோடி அரசு இந்திய மக்களை ஒட்டுமொத்தமாக அவமரியாதை செய்தது. மக்களுக்கு மரியாதை அளிக்காவிட்டால் இந்த நாட்டின் மீதான மரியாதையையும் நீங்கள் வழங்கவில்லை. இன்றைய சூழலில் அரசியல் என்பது அதிகாரம் பற்றியே சிந்திக்கிறது. மக்களின் தேவைகளில் கவனம் செலுத்தவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.


வயநாடு மக்களின் நலனுக்காக கடுமையாக உழைப்பேன் என்று பிரியங்கா காந்தி பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.