சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி வரும் 12-ந் தேதி கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில் தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
26-வது தேசிய இளைஞர் திருவிழா:
இந்தாண்டுக்கான தேசிய இளைஞர் திருவிழாவை, பிரதமர் மோடி திறந்து வைப்பதாக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹூப்பாலியில் வரும் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 26-வது தேசிய இளைஞர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவை, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும், கர்நாடக மாநில அரசும் இணைந்து நடத்துகின்றன.
விடுதலையின் 75ஆவது பெருவிழாவை கொண்டாடி வரும் நிலையில், அமிர்த காலத்தில் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விழா நடைபெறுவதாக அனுராக் சிங் தாக்கூர் கூறினார். பிரதமரின் 5 உறுதிமொழிகள் கொண்ட செய்தியை இளைஞர்களிடையே பரப்பும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறினார்.
ஜி20 அமைப்பு:
இந்தியா 2023 ஆண்டில் ஜி20 அமைப்பில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்று கூறிய அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர்களுக்கான ஒய் டாக்ஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தெரிவித்தார். ஜி20 தலைமை பொறுப்பையொட்டி ஏற்பாடு செய்யப்படும் இளைஞர் 20 கருப்பொருளை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.
பசுமை இளைஞர் திருவிழா:
இந்த ஆண்டின் இளைஞர் திருவிழா பசுமை இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் வழங்கப்படும் நினைவுப்பரிசுகள், பதக்கங்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்களாலானவையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15-ந் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏற்பாடு செய்யப்படும் யோகத்தான் நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலத்தின் 31 மாவட்டங்களைச் சேர்ந்த 5 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.