Watch Video: மங்களூரூ கல்லூரியில் பர்தா அணிந்து குத்தாட்டம் போட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்ய கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


கர்நாடக மாநிலம் மங்களூரூ பகுதியில் உள்ள வாமஞ்சூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியான, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில், ஹிந்தி பாடல் ஒன்றுக்கு 4 மாணவர்கள் பர்தா அணிந்து நடனமாடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் பர்தா (முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடை) அணிந்த நான்கு ஆண் மாணவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய சம்பவம் நடந்தது. இதனை சில மாணவர்கள் தங்களது மொபைலில் வீடியோ எடுத்து பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 






இதனால் இந்த  வீடியோ பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது, இதில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் 'தபாங்' திரைப்படத்தின் பாலிவுட் பாடலான "ஃபெவிகோல் சே" பாடலுக்கு நடனமாடுவதைக் காணலாம். வீடியோவில், மாணவர்கள் திடீரென மேடையை விட்டு வெளியேறுவது போல் தெரிகிறது.






இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் தங்களது ட்விட்டரில், எங்களது கல்லூரி மாணவர்களின் தகாத நடத்தைக்காக நான்கு மாணவர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாகவும், அவர்களின் நடனம் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. "சமூகங்கள் மற்றும் அனைவருக்கும் இடையிலான நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளையும் கல்லூரி ஆதரிக்காது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. 






மேலும், "சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ , மாணவர் சங்கம் திறப்பு விழாவின் போது மேடையில் நடனமாடியது.  முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நடனத்தின் ஒரு பகுதியைப் படம்பிடித்துள்ளனர்" என்று கல்லூரி மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.