வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் பெற்ற வெற்றியை இந்த முறையும் பெற்று விட வேண்டும் என பாஜக தலைவர்கள் வியூகம் அமைத்து வருகின்றனர்.
பயனாளிகளிடம் உரையாற்றிய மோடி:
இதனால், பிரதமர் மோடி நேடியாக களத்தில் இறங்கி ஒவ்வொரு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதோடு இல்லாமல் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
நாடு முழுவதிலும் 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' திட்டத்தின் ஆயிரக்கணக்கான பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மேகாலயாவின் மோடியாக மாறிய பெண்:
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளி ஒருவரிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேகாலயா மாநிலம் ரி போய் (Ri Bhoi) பகுதியைச் சேர்ந்த சில்மே மராக்கினிடம் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " இந்தி மொழியை நீங்கள் மிகவும் சரளமாகப் பேசுகிறீர்கள். என்னை விட சிறப்பாக பேசுகிறீர்கள்” என்றார்.
பின்னர், இவரது சமூக சேவை மனப்பான்மையை பாராட்டிய பிரதமர் மோடி, "உங்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்புதான் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசின் திட்டத்தின் பலன்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்தின் பின்னணியில் உள்ள பலம். உங்களைப் போன்றவர்கள் என் வேலையை மிகவும் எளிதாக்குகிறீர்கள். நீங்கள்தான் உங்கள் கிராமத்தின் மோடி" என்று பிரதமர் பாராட்டினார்.
யார் இந்த சில்மே மராக்?
மேகாலயா மாநிலம் ரி போய் (Ri Bhoi) பகுதியைச் சேர்ந்தவர் சில்மே மராக்கின். இவர் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தார். இந்த கடையின் மூலம் ஒரு சுய உதவிக் குழுவை உருவாக்கினார். உள்ளூர் பெண்களை சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்க உதவுவதுடன், 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்க உதவியுள்ளார்.
இவர் பிரதமரின் கிச்சான் சம்மான் நிதி, பிமா மற்றும் பிற திட்டங்களின் பயனாளி ஆவார். பெண் சில்மே சமீபத்தில் தனது விரிவாக்கப் பணிக்காக ஒரு ஸ்கூட்டியை வாங்கியுள்ளார்.
அவர் தனது பகுதியில் வாடிக்கையாளர் சேவை மையத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் அரசுத் திட்டங்களைப் பெற மக்களுக்கு உதவுகிறார். அவரது குழு, பேக்கரி கடை மற்றும் உணவு விநியோகத்தை செய்து வருகிறது. இதன் மூலம் அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறது.
'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' திட்டம்:
மத்திய அரசு அறிமுகப்படுத்திய கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா திட்டம், ஸ்வாநிதி யோஜனா உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ’விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' என்ற விளம்பர பிரசாரம் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பேனர், டிஜிட்டர் பேனர் வைக்கப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் வலம் வந்து, மத்திய அரசின் திட்டங்களை விளக்கும்.