Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் வலிமையான பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றை தாங்கும் வகையில், அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு:


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கோயிலின் குடமுழுக்கு விழா வரும் 22ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்கும் இந்த நிகழ்வில், நாட்டில் உள்ள பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில், 1000 ஆண்டுகளையும் கடந்து நிலைத்து நிற்கும் வகையில் அறிவியல்பூர்வமாக கட்டப்பட்டுள்ளது. பூகம்பங்கள் மற்றும் மிகத் தீவிரமான வெள்ளம் போன்றவற்றையும் தாங்கும் வகையில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இந்த கோயில் இறுதி வடிவம் பெற்றுள்ளது.


அறிவியல் கலந்த ராமர் கோயில்:


அயோத்தி ராமர் கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்ல, பண்டைய நம்பிக்கை மற்றும் நவீன அறிவியலின் கலவையாக உருவாகியுள்ளது. டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் லிமிடெட், எல்&டி, மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், கவுகாத்தி மற்றும் மெட்ராஸ்  ஐ.ஐ.டி ஆகியவை இணைந்து துல்லியமான திட்டமிடல் மற்றும் புதுமையான கட்டுமான நுட்பங்களின் மூலம் கோயிலை கட்டி எழுப்பியுள்ளன. பாரம்பரிய நாகரா பாணி கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்ட இந்த கோயிலின் வடிவமைப்பானது, முதலில் 1988ம் ஆண்டு பிரபல வடிவமைப்பாளர்களான சோம்புரா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. இருப்பினும், 2020ம் ஆண்டு வாஸ்து மற்றும் சிலை சாஸ்திரங்கள் அடிப்படையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 


கோயில் கட்டமைப்பு:


ராமர் கோயிலானது மொத்தமாக, கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது கன் மண்டபம், ரங் மண்டபம், நிருத்ய மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அடங்கும். ராமர் கோவில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமும், மொத்தம் 380 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் கொண்டுள்ளது. கோயில் கட்டுமானத்தில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பிரத்யேக கோயில்கள்:


ராம் கோயில் வளாகத்திற்குள், மகரிஷி வால்மீகி, மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி மற்றும் தேவி அஹில்யாவின் மரியாதைக்குரிய மனைவி ஆகியோருக்கு என பிரத்யேக கோயில்கள் உள்ளன. வளாகத்தின் நான்கு மூலைகளில் சூரிய தேவன், தேவி பகவதி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்கான கோவில்கள் உள்ளன. வடக்கு திசையில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்கு திசையில் அனுமன் ஆலயமும் உள்ளன.


மிகவும் வலிமையான அடித்தளம்:


கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.  நவீன இரும்பு, எஃகு அல்லது சிமென்ட் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. மற்ற பொருட்களுடன் ஒப்பிடுகையில் கல் நீண்ட ஆயுட்காலம் கொண்டிருப்பதால், கட்டமைப்பின் பூகம்ப எதிர்ப்பை அதிகரிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  கோயிலின் கட்டுமானத்தில் மிக முக்கியமான அறிவியல் அம்சங்களில் ஒன்று அதன் அடித்தளமாகும். இக்கோவில் 15 மீட்டர் தடிமனான கான்கிரீட் அடுக்கில் கட்டப்பட்டுள்ளது. இது சாம்பல், தூசி மற்றும் ரசாயனங்களால் செய்யப்பட்ட 56 அடுக்குகளை கொண்டுள்ளது.  இந்த வலுவான அடித்தளம் 21 அடி தடிமனான கிரானைட் பீடத்தால் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது கோயிலை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அஸ்திவாரத்தின் தூண்கள், வலிமைமிக்க ஆறுகளின் மேல் உள்ள பிரம்மாண்ட பாலங்களை போன்று அமைந்துள்ளது. இது நில அதிர்வை தாங்கும் கோயிலின் வலிமையை உறுதி செய்கின்றன. கோயிலுக்குள் அறை வெப்பநிலையை தொடர, இரவு நேரத்தில் மட்டுமே பவுண்டேஷனை பல்வேறு பொட்ருட்களை கொண்டு நிரப்பும் பணிகள் நடைபெற்றன.


”1000 ஆண்டுகள் நிலைத்து நிற்கும்”


கோயிலின் வடிவமைப்பு 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கு பழுதுபார்ப்பு தேவையில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்து நேபாளம் வரையிலான பகுதியில் நிலநடுக்கத்தின் தீவிரத்தை ஆராய்ந்து, கோயிலுக்கு தனித்துவமான அடித்தளத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது. மெட்ராஸ் ஐஐடியின் ஆலோசனையின் பேரில், 15 மீட்டர் ஆழத்திற்கு மேல் தோண்டி களிமண்ணை அகற்றி, அந்த பள்ளத்தை மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மண்ணால் நிரப்பியுள்ளனர். கோயில் கட்டப்பட்டுள்ள பகுதியின் வெள்ளப் பதிவேடுகளை ஆராய்ந்து, எதிர்கால வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. ராம நவமியின் போது மதிய நேரத்தில் சிலைகளின் நெற்றியில் சூரிய ஒளி படும்வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு ஆன்மீக அனுபவத்தை மேம்படுத்துகிறது.