இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம்:


மும்பையில் விமான நிலையத்தில்  விமானங்கள் நிறுத்துமிடத்தில் ஓடுதளத்திற்கு அருகில் பயணிகள் அமர்ந்து உணவு சாப்பிட்ட  விவகாரம் தொடர்பாக இண்டிகோ  நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் மட்டுமல்லாத இந்த விவகாரத்தில் மும்பை விமான நிலையத்தை பராமரிக்கும் எம்ஐஏஎல் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


அதாவது, மும்பை விமான நிலையத்திற்கு ரூ.90 லட்சமும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனத்திற்கு விமான பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. மும்பை விமான நிலையத்திற்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் விதித்துள்ளது.


நோட்டீஸ்:


ஓடுதளத்தில் பயணிகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இண்டிகோ நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு காரணம் கேட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


24  மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இல்லையென்றால் அபராதம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகளை செய்வதில் முனைப்புடன்  செயல்படவில்லை என்று கூறியுள்ளது.


பயணிகளின் வசதி, பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விமான நிறுவனம் செய்யப்பட்டது என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. சரியான விளக்கம் அளிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


என்ன நடந்தது?


கடந்த ஞாயிற்றுகிழமை கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ (6E 2195) விமானம் பனிமூட்டம் காரணமாக மும்பை சத்ரபஜி சிவாஜி மகாரஜ் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


இதனை அடுத்து, பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில், ஓடுதளத்துக்கு (விமானங்கள் நிறுத்தும் இடம்) அருகில் பயணிகள் அமர்ந்துள்ளனர். அங்கு இருந்தபடியே பயணிகள் இரவு உணவும் உட்கொண்டனர்.  இதை பார்த்ததும் விமான நிலையத்தின் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர்.






ஆனால், பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பும் கேட்டனர்.


இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் கூறுகையில், "வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.