அதிகளவில் விவாதங்களைக் கிளப்பியுள்ள பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று டெல்லியில் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, இதுபோன்ற திரைப்படங்கள் உண்மையை வெளிக்கொண்டு வருவதாகவும், இவற்றை அவமதிக்க சதித்திட்டம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


`கருத்து சுதந்திரத்தின் பெயரால் குரல் எழுப்பும் மொத்த ஜமாத்தும் கடந்த 5, 6 தினங்களாக கடும் கோபத்தில் இருக்கிறார்கள். திரைப்படத்தை அதன் தகவல்களுக்காகவும், கலைக்காகவும் விமர்சனம் செய்வதற்குப் பதிலாக, அதனை அவமதிக்க சதித் திட்டம் உருவாகி வருகிறது’ எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 


பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து காஷ்மீர் இந்துக்கள் வெளியேறியதன் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 



படக்குழுவினருடன் பிரதமர் மோடி


தொடர்ந்து பேசியுள்ள பிரதமர் மோடி, `எனது அக்கறை வெறும் திரைப்படத்திற்கானது மட்டும் அல்ல. உண்மையைச் சரியான முறையில் வெளிக்கொண்டு வருவது நாட்டிற்கு நலன் தருவதாக நம்புகிறேன்’ என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி படத்திற்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள், கடந்த பல ஆண்டுகளாக `உண்மையை’ மறைத்தவர்களிடம் இருந்தே வருவதாகவும் கூறியுள்ளார். 






பிரதமர் மோடி, `இந்தத் திரைப்படம் சரியானது அல்ல என நினைப்பவர்கள் தாங்களே சொந்தமாகத் திரைப்படம் இயக்க வேண்டும். அவர்களை எது தடுக்கிறது? இத்தனை ஆண்டுகளாக அவர்கள் மறைத்து வைத்திருந்த உண்மை வெளியே வந்திருப்பதால் அவர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்’ எனவும் கூறியுள்ளார். 



பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி


அனுபம் கேர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரபொர்தி, பல்லவி ஜோஷி முதலானோர் நடித்துள்ள `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா தானும் தனது அமைச்சரவையும் இந்தத் திரைப்படத்தைக் காணப் போவதாக அறிவித்துள்ளார். திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தனது மாநில அரசு பொழுதுபோக்கு வரியில் இருந்து இந்தப் படத்திற்கு விலக்கு அளிப்பதாக அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காவல்துறையினருக்கு இந்தத் திரைப்படம் பார்க்க விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்ததோடு, வரிவிலக்கும் அளித்து அறிவித்திருந்தார்.