கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, புதியதாக கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தார்.
கனவை நோக்கிய பயணம்:
இந்த திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “ ஷிவமோகா விமான நிலையம் மிகவும் பிரம்மாண்டமான விமான நிலையம் ஆகும். கர்நாடகாவின் கலாச்சாரம் மறறும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் ஒருங்கிணைப்பை இந்த விமான நிலையத்தில் காணலாம். இது வெறும் விமான நிலையம் மட்டுமில்லை. இந்த பகுதி இளைஞர்கள் கனவுகளை நோக்கி பயணிக்கும் ஒரு இடமாகும். இந்த வசதிகள் இந்த பகுதியின் வர்த்தகம், இணைப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும்.
ரயில்பாதைகள், சாலைகள், விமானப்பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் கர்நாடகாவின் முன்னேற்றப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நல்ல இணைப்புகளடன் கூடிய உள்கட்டமைப்பு முழு பிராந்தியத்திலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சிந்தனைகள் செயல்பாட்டின் விளைவே ஷிவமோகாவின் வளர்ச்சி ஆகும். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நேரம் என்பதை கர்நாடக மக்கள் நன்கு அறிவார்கள். நாம் இணைந்தே நடப்போம். நாம் இணைந்தே முன்னேறுவோம்”
இவ்வாறு அவர் கூறினார்.
450 கோடி மதிப்பு:
பிரதமர் மோடி இன்று புதியதாக திறந்து வைத்துள்ள ஷிவமோகா விமான நிலையம் 663 ஏக்கர் அளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 449.22 கோடி ஆகும். இந்த விமான நிலையத்திற்கான அடிக்கல் கடந்த 2020ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விமான நிலையமானது ஒரு மணி நேரத்தில் 300 பயணிகளை கையாளும் திறன் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விமான நிலையம் மூலமாக ஷிவமோகா மற்றும் மால்நாடு மண்டல பகுதிகள் வளர்ச்சியடையும் என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தற்போது திறக்கப்பட்டுள்ள 9வது விமான நிலையம் இதுவாகும். ஏற்கனவே, கர்நாடகாவில் பெங்களூர், மைசூர், பல்லாரி, பிடார். ஹூப்பள்ளி, கலபுர்கி, பெலாகவி மற்றும் மங்களூரில் விமானநிலையங்கள் உள்ளன. பெங்களூர் மற்றும் மங்களூர் ஆகிய 2 சர்வதேச விமான நிலையங்கள் தற்போது கர்நாடகாவில் உள்ளது.
2வது மிகப்பெரிய ரன்வே:
கர்நாடகாவிலே மிகப்பெரிய ரன்வே கொண்ட பெங்களூர் விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக அதிக நீளமுளள ரன்வே கொண்ட விமான நிலையமாக ஷிவமோகா விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் உள்ள கெம்ப கவுடா விமான நிலையத்தின் ரன்வே 3 ஆயிரத்து 200 மீட்டர் ஆகும். இதில் போயிங் 737 விமானத்தையே இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி கர்நாடகா வந்ததையடுத்து, அங்கு ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், கர்நாடகா வந்த பிரதமர் மோடியை மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், திறப்பு விழாவில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் பங்கேற்றார்.
மேலும் படிக்க:பாஜகவினர் அனைவரும் என்ன ஹரிசந்திராவின் உறவினர்களா? - மணீஷ் சிசோடியா கைது விவகாரத்தில் தெலங்கானா அமைச்சர் கேடிஆர் தடாலடி..!
மேலும் படிக்க: காட்டுப்பன்றியிடம் சிக்கிய 11 வயது மகள்.. உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தாய்.. கண்ணீர் வரவழைத்த சம்பவம்..!