நாட்டின் மருத்துவக் கல்வி முறையில் மாற்றம் தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிசந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, நீட் மற்றும் மருத்துவ சேர்க்கை தொடர்பான அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாகவும், இது மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை சுட்டிக் காட்டுவதாகவும் கூறினார்.


”மாற்றம் அவசியம்”


19வது சர் கங்கா ராம் சொற்பொழிவு நிகழ்ச்சியில்  "நீதிக்கான மருந்து: சுகாதாரத்தில் நியாயம் மற்றும் சமத்துவத்திற்கான தேடுதல்" என்ற தலைப்பில் தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார். அப்போது, ”நீட் தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் முடிவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் எனது தலைமையிலான அமர்வு வரை வந்துள்ளன.


பெரும்பாலும், நீதிமன்றங்கள் அரசின் கொள்கைக் களத்தில் நுழைய முடியாது. மேலும், மாணவர்களின் கருத்துகளைக் கேட்பது அரசின் கடமையாகும். இருப்பினும், அநீதி இழைக்கப்படும் போதெல்லாம், தலையிடுவது நீதிமன்றங்களின் கடமையாகிறது. நீட் வழக்குகளின் சுத்த வழக்குகள், லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையையும் அபிலாஷைகளையும் காட்டுகின்றன. மருத்துவம் மிகவும் விரும்பப்படும் தொழில்களில் ஒன்றாகும் என்பதற்கு இது சான்றாகும்.


இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களின் அவசியத்தின் அடையாளமாகவும் இந்த வழக்குகள் உள்ளன. நீதியின் கோட்பாடுகள் சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டின் நடைமுறைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இரு துறைகளும் நியாயம், சமத்துவம் மற்றும் சமூகங்கள் மற்றும் தனிநபர்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவை” என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.


நீட் தேர்வு விவகாரம்:


மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என கடந்த 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரி மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தது. ஆனால், அந்த நடவடிக்கைகளில் எந்த முடிவும் எட்டாத நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.


அந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது. எனவே, மீண்டும் பேரவையில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒப்புதல் பெற ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. அதன் மீதும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றும், தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


முன்னதாக 2021ம் ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் முன்பதிவு செய்த நிலையில், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.