அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. 


ராஜஸ்தானை குறிவைக்கும் பாஜக:


குறிப்பாக, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள பாஜக, எந்த மாநிலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வியூகம் அமைத்து வருகிறது. அந்த வகையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து வருகிறார்.


அதன்படி, தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்ற பிரதமர் மோடி உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 
வாரங்கலில் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய மோடி, இந்திய வரலாற்றில் தெலங்கானா மக்கள் சிறப்பாக பங்களித்ததாக புகழாரம் சூட்டினார்.


கொட்டும் மழையில் காரில் சென்ற பிரதமர் மோடி:


இதை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் பிகானேருக்கு சென்றுள்ள மோடி, கொட்டும் மழையில் காரில் சாலை பேரணி மேற்கொண்டார். அவருடன் சைக்கிளில் சிலரும் பேரணி மேற்கொண்டனர். இதை, பார்க்க வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்தனர். பின்னர், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசினார்.


"காங்கிரஸ் ஆட்சியால் ராஜஸ்தானின் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய்தார்கள்? 4 ஆண்டுகளாக ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும், அரசும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் கால்களை இழுத்து கீழே தள்ளிவிடுகின்றனர்.


நாங்கள் டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு திட்டங்களை அனுப்புகிறோம். ஆனால், ஜெய்ப்பூரில் அமர்ந்து கொண்டு காங்கிரஸ் அதை தடுத்து நிறுத்துகிறது. ராஜஸ்தான் பிரச்னைக்கும் உங்கள் பிரச்னைகளுக்கும் காங்கிரஸ் கட்சியால் தீர்வு தர முடியாது. ஒவ்வொரு வீட்டுக்கும் பலன்களை வழங்கும் பாஜகவின் திட்டத்தால் காங்கிரஸ் அரசும் கலக்கத்தில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் காங்கிரஸ் மாநிலத்திற்கு கேடுதான் செய்தது.


ராஜஸ்தானில் தட்பவெப்பம் மட்டுமில்லாமல், காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களின் கோபமும் அதிகரித்துள்ளது என்பதை மக்களின் உற்சாகம் பறைசாற்றுகிறது. பொதுமக்களின் கோபம் அதிகரிக்கும் போது, ​​அதிகாரத்தின் வெப்பம் தணிந்து, அதிகாரம் மாறுவதற்கு நேரம் எடுக்காது" என்றார்.


கடந்த 9 மாதங்களில், ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 7ஆவது சுற்றுப்பயணம் இதுவாகும். ராஜஸ்தானை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டு கால வரலாற்றில் ஆளுங்கட்சி ஆட்சியை தக்க வைத்ததே இல்லை. இந்த முறை, வரலாற்றை மாற்றி அமைக்க காங்கிரஸ் கட்சியும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.