கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்திற்கு அருகே யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு அருகே தண்டவாளத்தில் விழுந்தபோது, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று மோதியதில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது. இந்தநிலையில், காலை 6 மணி நேரப்படி, இந்த விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 280ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 900 பயணிகள் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
தலைவர்கள் இரங்கல்:
குடியரசுத்தலைவர் இரங்கல்:
ஒடிசாவின் பாலஷோரில் ஏற்பட்ட ரயில் விபத்து துர்திர்ஷ்டவசமானது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
பிரதமர் மோடி:
ரயில் விபத்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களைத் தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களையும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக ஹெல்ப் லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
நேபாள பிரதமர் இரங்கல்:
ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 280 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒடிசா ரயில் சோகத்திற்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்தார்.
ராகுல் காந்தி இரங்கல்:
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.
மேலும், மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.