PM Modi Selfie: ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இத்தாலி சென்று நாடு திரும்பியுள்ளார்.


மோடி - மெலோனி செல்ஃபி:


இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு இடையே,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  இத்தாலிய பிரதமரான ஜார்ஜியா மெலோனி ஆகியோர் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜி7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் கலந்து கொள்வதற்காக, தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவுக்கு பிரதமர் சென்றிருந்தார். இந்நிலையில் மோடி மற்றும் மெலோனி சேர்ந்து செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.






துபாயில் எடுக்கப்பட்ட #MELODY செல்ஃபி:


முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயிலும் நடைபெற்றது. அதிலும் ஜார்ஜியா மெலோனி பங்கேற்றார். அப்போதும், பிரதமர் மோடியுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி, #MELODY என்ற ஹேஷ்டேக்கில் இணையதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.






மெலோனி உடன் பேச்சுவார்த்தை:


பிரதமர் மோடி தனது இத்தாலி பயணத்தின் போது, ​​உலகத் தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தாலிய பிரதமர் மெலோனி உடனும் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அப்போது இரு தலைவர்களும் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்கு, மெலோனியின் அழைப்பின் பேரிலேயே மோடி சென்றது குறிப்பிடத்தக்கது. அவர் மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பின், மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப்பயணம் இதுவாகும்.






 


வெளியுறவு அமைச்சக அறிக்கை:


மோடி மற்றும் மெலோனி இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இத்தாலியின் விமானம் தாங்கி கப்பலான ITS Cavour மற்றும் பயிற்சிக் கப்பலான ITS Vespucci இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு வரவிருக்கும் வருகையை இரு தலைவர்களும் வரவேற்றனர். இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியின் முயற்சியில்  இந்திய ராணுவத்தின் பங்களிப்பை அங்கீகரித்ததற்காக இத்தாலிய அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இத்தாலியில் உள்ள மோன்டோனில் உள்ள யஷ்வந்த் காட்ஜ் நினைவகத்தை இந்திய அரசு மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார்.  இந்தியா-இத்தாலி மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றம் தொடர்பாக விவாதித்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.