சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம் அளித்துள்ளார். 


ஒமிக்ரான் தொற்று உலகெங்கிலும் உள்ள சர்வதேச பயணத்தின் மீதான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஒமிக்ரான் தொற்று இந்தியா உட்பட பல நாடுகளில் புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளது எனத் தெரிவித்தார். 


மேலும், “சர்வதேச விமான சேவையை தொடங்கலாம் என நினைத்தோம். ஆனால் ஒமிக்ரான் திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. எனவே விமான சேவைக்கு மீண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளோம். ஒமிக்ரான் தொற்று நிலைமையை பொறுத்தே சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும். ஆனால் அது எப்போது என்று இப்போது சொல்ல முடியாது. கொரோனாவுக்கு முன், அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை தினசரி 4.2 லட்சமாக இருந்தது. இப்போது  3.7 லட்சம் முதல் 3.95 லட்சம் வரை பயணிகளாக உள்ளனர்” எனத் தெரிவித்தார். 




முன்னதாக, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் சர்வதேச விமான சேவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் சரக்கு விமான சேவையும், சிறப்பு விமான சேவையும் இயங்கி வந்தது. இதனிடையே கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில் சர்வதேச விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கி விடும் என கடந்த மாதம் 26-ந் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒமிக்ரான் திடீரென காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி சர்வதேச விமான சேவை தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 


கொரோனா பெருந்தொற்றின் புதிய திரிபு வைரஸான ஒமிக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் மிக வேகமாகப் பரவிக் கொண்டிருப்பதால், அபாய வட்டத்துக்குள் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் முக்கிய விமான நிலையங்களின் வழியாக நுழையும் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் கட்டாய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. 


மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் வந்து இறங்கும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் வந்து இறங்கியதும் ஆர்டி - பிசிஆர் கொரோனா பரிசோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு முன்பதிவு செய்யவேண்டும் எனவும், இந்த நடைமுறை டிசம்பர் 20 முதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 




ஆபத்தான நாடுகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து இந்த 6 பெரிய விமான நிலையங்களுக்குள் நுழையும் சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு முன்பதிவு செய்துள்ளார்களா என்பதை விமானத் துறை கண்காணிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 14 அன்று, இந்தியாவில் ஒமிக்ரான் திரிபு காரணமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்த பிறகு இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் படிப்படியாக ஒமிக்ரான் திரிபு காரணமான தொற்று பரவி வருகிறது. டெல்லியின் ஏற்கனவே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 என்று இருந்த நிலையில் தற்போது 4 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.