வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கும் இந்தியா, தற்போது உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று மத்திய பிரதேச மாநிலம் தாமோவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், 'ஆதங்க்' (பயங்கரவாதத்தை) ஏற்றுமதி செய்து வந்த ஒரு நாடு, தற்போது 'ஆட்டாவுக்காக' (கோதுமை மாவு) போராடி வருவதாக பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார். மேலும், “உலகில் பல நாடுகளின் நிலை மோசமடைந்துள்ளது. பல நாடுகள் திவாலாகி வருகின்றன. 'ஆதங்க்' (பயங்கரவாதம்) சப்ளையராக இருந்த நமது அண்டை நாடுகளில் ஒருவர் கூட, இப்போது 'ஆட்டா' (மாவு) சப்ளைக்காக போராடி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி வந்த இந்தியா, தற்போது உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மத்தியில் வலுவான மற்றும் நிலையான ஆட்சி அமைய நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்த அரசாங்கம் ’ராஷ்டிர பிரதம்’ (முதலில் தேசம் தான்) என்ற கொள்கையுடன் செயல்படுகிறது மற்றும் எந்த அழுத்தத்திற்கு அடிபணியாது” என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரித்து பேசினார். பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் காங்கிரஸ் தடைகளை ஏற்படுத்துவதாக விமர்சித்த அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், தேஜஸ் வானத்தில் பறந்திருக்காது என்றார்.
இதற்கிடையில், ராமஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கின் இக்பால் அன்சாரி, ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்ட நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பை ஏற்று வந்ததற்காக பிரதமர் மோடி பாராட்டினார். அழைப்பு விடுத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத எதிர்க்கட்சிகளையும் அவர் கடுமையாக சாடினார். இது குறித்து பேசிய அவர், “அன்சாரி குடும்பத்தின் இரண்டு தலைமுறையினர் இந்துக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பாபர் மசூதிக்காகப் போராடினார்கள். இக்பால் அன்சாரியும் அவரது குடும்பத்தினரும் பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள், ஆனால் உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தபோது அவர்கள் தீர்ப்பை வரவேற்றனர். இது மட்டுமல்ல.
ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் போது, ராமர் கோயில் அறக்கட்டளை அனைவருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பியது, மேலும் இந்த நிகழ்ச்சியில் இக்பால் அன்சாரி கலந்து கொண்டார் என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், மேலும், அவருக்கு காங்கிரஸுடன் இணைந்து, அறக்கட்டளை அழைப்பு அனுப்பியது. சமாஜ்வாதி கட்சி மற்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் ராமர் கோயிலுக்கு எதிராக போராடிய பிறகு, அவர் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்டார்" என்று பிரதமர் மோடி கூறினார்.