மக்களவை தேர்தலின் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகிறார். வருகின்ற 30ம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடி, பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்று தியானம் செய்ய இருக்கிறார். 30ம் தேதி பிற்பகல் தொடங்கும் இந்த மோடியின் தியானமானது ஜூன் 1ம் தேதி வரை தொடர்கிறது. ஜூன் 1ம் தேதி தியானத்தை முடித்துக்கொள்ளும் மோடி, அன்றைய தினம் கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். 


தொடர்ந்து இரண்டு நாள்கள் தியானம் செய்யும் பிரதமர் மோடி: 


30ம் தேதி பிற்பகலில் தியானத்தை தொடங்கும் பிரதமர் மோடி, 1ம் தேதி காலை வரை தியானம் செய்ய இருக்கிறார். அதாவது இரண்டு இரவு ஒரு பகல் முழுவதும் தியானம் செய்கிறார். 


30ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி: 


மே 30ம் தேதி பஞ்சாப் மாநில ஹோஷியார்பூரில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிறகு, தமிழ்நாடு வரும் மோடி அன்று மாலை இந்த தியானத்தை தொடர இருக்கிறார். 


கன்னியாகுமரியை தேர்வு செய்தது ஏன்..? 


புராண கதைகளின்படி, பார்வதி தேவியும் சிவபெருமானும் ஒற்றை காலில் நின்ற இடம்தான் இந்த விவேகானந்தார் பாறை என்று கூறப்படுகிறது. மேலும், சுவாமி விவேகானந்தர் ஞானம் பெற்றதும் இதே இடம்தான் என்றும் கூறப்படுகிறது.


இந்த விவேகானந்தர் பாறையில்தான் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. புத்தருக்கு தன் வாழ்நாளில் போதி மரம் போன்று தனி இடம் இருப்பது போல், சுவாமி விவேகானந்தரின் வாழ்விலும் இந்த பாறைக்கு அதே இடம் உண்டு என்று மக்கள் நம்புகிறார்கள்.  விவேகானந்தர் பாறை இருக்கும் இடம் இந்தியாவின் தென்கோடி முனையாகும். இங்குதான் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் என முக்கடலும் இணைக்கிறது. 


மோடி தியானம் செய்வது இது முதல் முறையல்ல: 


2024ம் ஆண்டுக்கு முன்னதாக, 2019 மக்களவை தேர்தலின்போதும் மே 18ம் தேதி அன்று பிரதமர் மோடி கேதர்நாத்தில் தியானம் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு மே 18ம் தேதி மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த மறுநாள், கேதார்நாத்தின் ருத்ரா குகையில் மோடி தியானம் செய்தார். சுமார் 17  மணி நேரம் இந்த குகையில் அவர் தியானம் செய்துள்ளார். 


அதன்பிறகு, பிரதமர் மோடி மீண்டும் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அதேபோன்று மீண்டும் தியானத்தில் ஈடுபட்டு, 3வது முறையாக பிரதமராக அமர்வார் என்று நம்பப்படுகிறது. 


ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு: 


மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வருகின்ற ஜூன் 1ம் தேதி உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த கடைசிக்கட்ட தேர்தலுக்கு பிறகு, வருகின்ற ஜூன் 4ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.