Gurmeet Ram Rahim Singh: தேரா முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில், சிர்சாவின் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் இன்சான் உள்ளிட்ட 5 பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சிபிஐ சிரப்பு நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீட்டில் விடுதலை:
2002ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சித் சிங் கொலை வழக்கின் விசாரணையின் முடிவில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குர்மித் ராம் ரஹிம் சிங் உள்ளிட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது, அதோடு குர்மீத் இந்த வழக்கில் ரூ.31 லட்சம் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. இதையெதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ்வர் தாக்கூர் மற்றும் நீதிபதி லலித் பத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன் முடிவில், குர்மித் உள்ளிட்ட 5 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை:
தனது இரண்டு சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம், தற்போது ரோஹ்தக்கின் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய சாமியார் பலாத்கார வழக்குகளிலும், பத்திரிகையாளர் ராம் சந்தர் சட்டர்பதி கொலையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார். அனைத்து தண்டனைகளையும் எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், "ரஞ்சித் சிங் கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது" என்று அவரது வழக்கறிஞர் ஜிதேந்தர் குரானா தெரிவித்துள்ளார். இதானல், கொலை வழக்கில் விடுதலையானாலும் குர்மித் விடுதலை ஆக முடியாத சூழல் நிலவுகிறது.
கொலை வழக்கு விவரம் என்ன?
ரஞ்சித் சிங் ஜூலை 10, 2002 அன்று, ஹரியானாவின் குருக்ஷேத்ராவில் உள்ள கான்பூர் கோலியன் கிராமத்தில், தேரா தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டார் என கூறப்பட்டது. காரணம் பெயரில்லாத கடிதம் ஒன்றின் வாயிலாக, குர்மித் ராம் ரஹிம் சிங் தேராவில் இணைந்த பெண்களை எவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று விவரிக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை ரஞ்சித் சிங் தான் எழுதினார் எனவும், அதனால் அவர் சாமியாரால் கொல்லப்பட்டதாகவும் சந்தேகிக்கப்பட்டது.