விதிகளை மீறியதாகக் கூறி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யெஸ் வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் செலுத்திய கடன் தொகைகளுக்கான விவரங்களை சரிவரப் பராமரிக்காதது, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகையை பராமரிக்காததற்கு வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்தது ஆகிய காரணங்களுக்காக மொத்தம் ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் அரசு, தனியார் வங்கிகளை ஆர்.பி.ஐ. எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வருகிறது. தனது விதிமுறைகளுக்கு இணங்காத வங்கிகளுக்கு அவ்வப்போது ஆர்.பி.ஐ. அபராதம் விதிப்பது வழக்கம்.


ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்


இதற்கிடையே வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை வழங்கியதற்கான விவரங்கள் குறித்த சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு ( ICICI Bank ) ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை ஆர்பிஐ பிறப்பித்து உள்ளது.


இதுகுறித்து ஆர்பிஐ கூறும்போது, "இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும் ஆர்.பி.ஐ., தனது வாடிக்கையாளர்களுடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேற்கொண்டுள்ள எந்தவொரு பரிவர்த்தனைகள் அல்லது ஒப்பந்தத்தில் தலையிட விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளது.


யெஸ் வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம்


அதேபோல யெஸ் வங்கிக்கும் ( Yes Bank )அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காமல் இருப்பதற்காக வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இவ்வாறு செய்யக்கூடாது என்று ஆர்.பி.ஐ. உத்தரவிட்டும், யெஸ் வங்கி கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.


அதேபோல பார்க்கிங் நிதி மற்றும் வாடிக்கையாளரின் பரிவர்த்தனை ஆகிய அங்கீகரிக்கப்படாத நோக்கங்களுக்காக, தன் வாடிக்கையாளர்களின் பெயரில் சில உள் கணக்குகளைத் திறந்து இயக்கியது தெரியவந்தது. இதனால் விதிகளை மீறியதாக யெஸ் வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் இரண்டு வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1.91 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.