ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 74ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பாத்தில் முப்படை வீரர்களின் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். இதற்கு சிறப்பு விருந்தினராக உலக தலைவர்கள் அழைக்கப்படுவது வழக்கம்.


அந்த வகையில், இந்தாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி கலந்து கொள்கிறார். கொரோனா காரணமாக, 2021 மற்றும் 2022 ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.


இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளும் தேசிய மாணவர் படை (என்சிசி) வீரர்கள், தேசிய சேவை திட்டத்தின் (என்எஸ்எஸ்) தன்னார்வலர்கள், பங்கு கொள்பவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.


அப்போது, இளைய தலைமுறை வருங்கால இந்தியாவை முன்னெடுத்து செல்ல தயாராக இருப்பதாக மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இளைஞர்கள் நாட்டின் விருப்பங்கள் மற்றும் கனவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.


இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான மிகப்பெரிய பொறுப்பு அவர்களின் தோள்களில் உள்ளது. என்னை பொறுத்தவரையில், 'யுவ சம்வாத்' மாணவர் மன்றம் இரண்டு காரணகளால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். இளைஞர்களிடம் ஆற்றல், உற்சாகம், வைராக்கியம் புதுமை ஆகியவற்றை விதைக்கிறது. 


இதனால், உங்கள் மூலம் பெறப்படும் நேர்மறை என்னை இரவும் பகலும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. 75ஆவது சுதந்திர தின காலத்தில் நீங்கள் அனைவரும் நாட்டின் விருப்பங்கள் மற்றும் கனவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். 


வளர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய பயனாளிகளாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள். இதைக் கட்டமைக்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது. பரீக்ஷா பே சர்ச்சா இயக்கம் மூலம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுடன் உரையாட உள்ளேன்" என்றார்.






இதை தொடர்ந்து, குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ள கலைஞர்கள், பிரதமர் மோடி முன்பு பாரம்பரிய நடன நிகழ்ச்சியை நிகழ்த்தி காட்டினர்.