இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை காண முக்கிய காரணம், அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான வீழ்ச்சி அடைந்ததே ஆகும். அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தான், அதானி குழுமத்தின் பங்குகள் ஒரே நாளில் 7 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சி அடைய காரணமாகும்.
அதானி கண்ட கடும் சரிவு:
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் கடந்த 2 அண்டுகளாக, அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், அதிகாரிகள், பங்குதாரர்கள் என பலரிடம் கருத்துக்களைக் கேட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ”அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகள் செய்துள்ளது. ரூ.17.80 லட்சம் கோடி மதிப்பிலான தொகைக்கு அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்து, பங்குகளை திருத்தியுள்ளது” என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரூ.96,672 கோடி இழப்பு:
இந்த அறிவிப்பு வெளியானதும் அதானி குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்புகள், சரசரவென வீழ்ச்சி கண்டன. அதன்படி, அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி டோட்டல் கேஸ், எண்டர்பிரைசஸ், டிரான்ஸ்மிஷன், கிரீன் எனர்ஜி, போர்ட்ஸ், பவர் மற்றும் அதானி வில்மர் ஆகிய 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 54,542 கோடி ரூபாய் இழப்பினை கண்டது. இதன் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ,ரூ.96 ஆயிரத்து 672 கோடி என கூறப்படுகிறது. இதனால் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பானது ரூ.19.20 லட்சம் கோடியிலிருந்து, ரூ.18.23 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
பணக்காரர்கள் பட்டியலில் சரிவு:
இதையடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 121 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலும், 120 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் அதானி நான்காவது இடத்தை வகிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் அவரது சொத்து மதிப்பு 155 பில்லியம் அமெரிக்க டாலர்களை கடந்து, உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள்:
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில், ”அதானியின் சொத்து மதிப்பு பெரும்பாலும் பங்குகளின் உயர்வால் கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டியதாகும். இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் மேலே குறிப்பிட்ட 7 நிறுவனங்களின் பங்குகளும் 819 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்கு மதிப்பு மட்டும் 125 சதவிகிதம் உயர்ந்தது, அதானி பவர், சமையல் எரிவாயு ஆகியவற்றின் பங்குகள் 100 சதவீதம் உயர்ந்தன. கரீபியன் நாடுகள்,மொரிஷியஸ், ஐக்கிய அரபுஅமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதானி குழுமம் பல்வேறு போலி நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அதானி குழுமத்துடன் கடன் அளவுக்க அதிகரித்துக் கொண்டே இருப்பது, முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் அதானி நிறுவனத்தின் கடன் 40 சதவீதம் உயர்ந்து, ரூ. 2.20 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.