பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றிவைக்க செங்கோட்டைக்கு வந்தடைந்த பின் நாட்டின் முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி. 






10வது முறை தேசியக்கொடி ஏற்றிய மோடி:


இதன் மூலம் டெல்லி செங்கோட்டையில் அதிக முறை தேசியக்கொடி ஏற்றிய இந்தியாவின் மூன்றாவது பிரதமர் என்ற மன்மோகன் சிங்கின் சாதனையை மோடி சமன் செய்தார். முன்னதாக சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டை சென்றார். அவரை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைஅமைச்சர், பாதுகாப்பு செயலர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.


அணிவகுப்பு மரியாதை:


தொடர்ந்து,  முப்படை மற்றும் டெல்லி போலீசாரின் அணிவகுப்பு மரியாதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முப்படைகளில் சிறப்பு அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 21 குண்டுகள் முழங்க தேசிய வணக்கம் செலுத்தினார். தேசியக் கொடிக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவப்பட்டது.