77வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியை 10 வது முறையாக ஏற்றி வைத்து சாதனை படைக்க உள்ளார். தொடர்ந்து 10 முறை மூவர்ணக் கொடியை ஏற்றுவதன் மூலம் மன்மோகன் சிங்கிற்கு சமமாக இருப்பார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 10 முறை செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 10 முறை தேசியக் கொடியை ஏற்றிய சாதனையை மன்மோகன் சிங்குடன் பகிர்ந்து கொள்வதோடு, மூவர்ணக் கொடியை அதிகமுறை ஏற்றிய இந்தியப் பிரதமராகவும் மோடி இடம்பிடிப்பார். இதுவரை இந்தியா 15 பிரதமர்களை சந்தித்துள்ளது. இந்த 15 பிரதமர்களில் 13 பேர் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர். இரண்டு பிரதமர்கள் - குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவருக்கும் சுதந்திர தினத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதிக முறை தேசிய கொடி ஏற்றிய சாதனை முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சேரும். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றியது முதல், மே 27, 1964 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை நேரு தொடர்ந்து 17 முறை தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். நேருவின் மகள் இந்திரா காந்தி அதிக முறை தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 16 முறை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். நேருவைப் போல் தொடர்ச்சியாக இல்லை என்றாலும் சுமார் நான்கு வருட இடைவெளியில் இந்த சாதனை புரிந்துள்ளார். ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 வரை தனது பிரதமராக இருந்தபோது இந்திரா தொடர்ந்து 11 முறை தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். ஜனவரி 14, 1980 முதல் அக்டோபர் 31, 1984 வரை தொடர்ந்து ஐந்து முறை அவர் கொடியை ஏற்றியுள்ளார்.
இதுவரை 10 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், மே 22, 2004 முதல் மே 26, 2014 வரை 10 முறை மூவர்ணக் கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளார். இருப்பினும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் 76 வது ஆண்டு விழாவில், தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்வார், மேலும் மே 26, 2014 முதல் தொடர்ந்து 10 முறை கொடியேற்றும் பிரதமராகவும் ஆவார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் தொடர்ந்து 6 முறை மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றியுள்ளார். அவர் இரண்டு முறை பிரதமராகப் பதவியேற்றாலும், மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையிலான காலக்கட்டத்தில் முதல் தடவையாகக் கொடி ஏற்றும் வாய்ப்பை அவரால் பெற முடியவில்லை. மார்ச் 19, 1998 முதல் மே 22, 2004 வரை இரண்டாவது முறை பிரதமராக வாஜ்பாய் தேர்ந்தெடுத்த போது, தொடர்ந்து ஆறு முறை மூவர்ணக் கொடியை உயர்த்தினார்.
1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி - அவரது தாயார் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் டிசம்பர் 2, 1989 வரை, தொடர்ந்து ஐந்து முறை தேசியக் கொடியை செங்கோட்டையில் ஏற்றியுள்ளார். தொடர்ந்து 5 முறை கொடியேற்றிய ராஜீவ் காந்தியின் சாதனையை, பின்னர் ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை பதவியில் இருந்த மற்றொரு காங்கிரஸ் பிரதமர் பிவி நரசிம்மராவ் சமன் செய்தார்.
இரண்டு பிரதமர்கள் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் மொரார்ஜி தேசாய் - தலா இரண்டு முறை கொடியை ஏற்றியுள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 இல் பிரதமராகப் பதவியேற்றது முதல், ஜனவரி 11, 1966 இல் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தாஷ்கண்டில் மறையும் வரை இரண்டு முறை கொடியை ஏற்றியுள்ளார். நான்கு பிரதமர்கள் சரண் சிங், வி.பி.சிங், எச்.டி.தேவே கவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோர் தலா ஒருமுறை மட்டுமே செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.