பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக அளவில் ஏன் சிறப்பான மரியாதை செலுத்தப்படுகிறது என்பது குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அளித்துள்ள விளக்கம் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜஸ்தானில் 1913ஆம் ஆண்டு ஆங்கிலேய ராணுவம் நடத்திய தாக்குதலில் பன்ஸ்வாரா, தாம் பகுதிகளில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொல்லப்பட்ட அனைவரும் பழங்குடியினர் எனும் நிலையில், இந்த தாம் பகுதி, ராஜஸ்தான்-குஜராத் எல்லையில் உள்ள பன்ஸ்வாராவில் அமைந்துள்ளது.
இந்தத் துயர சம்பவத்தை நினைவுகோரும் நிகழ்ச்சி இன்று பன்ஸ்வாராவில் நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் கெலாட் இருவரும் கலந்துகொண்டனர்.
ஒரே மேடையில் இருவரும் தோன்றிய நிலையில், தொடர்ந்து பேசிய அசோக் கெலாட், "பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் அவருக்கு சிறப்பான மரியாதை கிடைக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஜனநாயகத்தின் வேர்கள் ஆழமாக ஓடும் காந்தி பிறந்த நாட்டின் பிரதமராக இருப்பதால் அவருக்கு மரியாதை கிடைக்கிறது. ஜனநாயகம் உயிர்ப்புடன் உள்ளது" எனப் பேசியுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ரத்லாம்-துங்கர்பூர் மற்றும் பன்ஸ்வாரா இடையேயான ரயில்வே திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறும் அசோக் கெலாட் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நானும் அசோக் கெலாட்டும் முதலமைச்சர்களாக இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் முதலமைச்சர்களில் அவர்தான் மூத்தவர். இப்போது மேடையில் அமர்ந்திருப்பவர்களிலும் மூத்த முதலமைச்சர் அசோக் கெலாட்” என்று பேசினார்.
மேலும், “பழங்குடியின மக்களின் போராட்டத்துக்கும் தியாகத்துக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் சரியான இடம் அளிக்கப்படவில்லை. பல தசாப்தங்களுக்கு முந்தைய இந்தத் தவறை இன்று இந்த தேசம் திருத்திக் கொண்டு வருகிறது. பழங்குடியின மக்கள் இன்றி இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் முழுமை அடையாது" என்றும் பேசியுள்ளார்.