குஜராத் மாநிலத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் குறைந்தது 47 குழந்தைகள், பல பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளனர் எனக் கூறப்படுகிறது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படை வீரர்கள் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது. மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் நேற்று இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டிருந்தது. இந்த விபத்து குறித்து பல்வேறு விதமான திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாலத்திற்கான தகுதி சான்றிதழை மாநகராட்சி அமைப்பு வழங்காமலேயே பாலம் திறக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.
இதற்கு மத்தியில், பாலத்தில் இருந்த சிலர், அதை வேண்டுமென்றே ஆட்டியதாகவும் அதனால்தான் அது சரிந்து விழுந்ததாக அங்கிருந்த சிலர் தெரிவித்திருந்தனர். பின்னர், விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு சில இளைஞர்கள் அந்த பாலத்தின் கேபிளை ஆட்டுவதும் அதை தொடர்ந்து அது அறுந்து விழுந்ததும் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், விபத்து நடந்து பகுதிக்கு பிரதமர் சென்றுள்ளார். அவரிடம், விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விளக்கப்பட்டது. பிரதமரின் வருக்கைக்கு முன்னதாக, நேற்றிரவு நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு மோடி தலைமை தாங்கினார். அதில் மீட்புப் பணிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.
ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தை புதுப்பித்த நிறுவனமான ஓரேவா குழுமம், பாலத்தை திறப்பதற்கு முன்பு குடிமை அதிகாரிகளிடம் இருந்து தகுதி சான்றிதழைப் பெறவில்லை என்பதை மோர்பி முனிசிபல் ஏஜென்சி தலைவர் சந்தீப்சிங் ஜாலா உறுதிப்படுத்தி உள்ளார்.
விபத்து நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 400க்கும் மேற்பட்டோருக்கு 12 முதல் 17 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதனால் அந்த பாலத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பழைய உலோக கேபிள்கள் அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. குஜராத் தடயவியல் ஆய்வகமும் மக்கள் கூட்ட நெரிசலில் பாலம் அறுந்து விழுந்ததை கண்டறிந்துள்ளது.
பாலத்தை பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக குறைந்தபட்சம் எட்டு முதல் 12 மாதங்கள் வரை மூடி வைக்க நிறுவனம் ஒப்பு கொண்டது. ஆனால், கடந்த வாரம் பாலத்தை திறந்தது தீவிரமான, பொறுப்பற்ற கவனக்குறைவான செயல் என முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.