சாதிகள் சாமியால் உருவாக்கப்படவில்லை சாமியார்களால் தான் உருவாக்கப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். 


 மும்பையில் புனிதர் சிரோன்மணி ரோஹிதாஸின் 647வது பிறந்தநாள் விழாவில் பேசிய மோகன் பகவத், சாதிகளை எந்த சாமியும் படைக்கவில்லை. சாமியார்கள்தான் அவர்களின் சுய லாபத்திற்காக உருவாக்கினர். அவர்களே தான் சாதியின் மூலாக பல பிரிவினைகளை உருவாக்கினார்கள். ஆனால் என்றும் இறைவனின் பார்வை முன் அனைவரும் சமமே. இதை போதித்ததால் தான் ரோஹிதாஸ் புனிதரானார். அந்த போதனை தான் அவரை புனிதர் என்ற அந்தஸ்த்திற்கு உயர்த்தியுள்ளது. கபீர், சூர்தாஸ், துளசிதாசரை விடவும் ரோஹிதாஸ் அதனாலேயே உயர்ந்து நிற்கிறார்.


ஏற்றத்தாழ்வு கூடாது:


இந்த உலகில் எந்த ஒரு வேலையையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்று பிரிக்க முடியாது.  பாத்திரம் தேய்க்கும் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவர் திடீரென தொழில் தொடங்க நினைத்தார். அவரிடமிருந்ததோ சொற்ப முதலீடுதான். தன்னிடமிருந்த குறைந்த அளவிலான முதலீட்டைக் கொண்டு பான் மசாலா கடை ஒன்றை தொடங்கினார். அந்த பான்மசாலா கடை மூலம் ரூ.28 லட்சம் வரை சம்பாதித்திருக்கிறார். ஆனால் இளைஞர்களுக்கு இதை முன்னுதாரணமாக எடுப்பதில்லை. மாறாக வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு முதலாளியின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். எல்லோரும் வேலை வேலை என்று அலைகின்றனர். வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கும் இந்த எண்ணம் தான் காரணம்.


நாட்டில்  அரசு வேலைவாய்ப்புகளோ 10 சதவீதம் தான். தனியார் வேலை வாய்ப்பு 20 சதவீதம் என வைத்துக் கொள்வோம். எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் கூட அதனால்   30 சதவீதத்திற்கும் மேல் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. திறன் சார் வேலைகளுக்கு இங்கு மதிப்பே இல்லை.  இந்த வேலை உயர்ந்தது, இந்த வேலை தாழ்ந்தது என்ற இளைஞர்களின் புரிதலற்ற பார்வையால் தான் வேலையில்லா திண்டாட்டம் உருவாகிறது.


ஒரு விவசாயி எவ்வளவு பொருள் ஈட்டி செல்வந்தராக இருந்தாலும் அவருக்கு திருமணத்திற்கு ஒரு பெண் கிடைப்பதில்லை. ஒருசிலர் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்வர். ஒரு சிலர் சமுதாய முன்னேற்றத்திற்காக வேலை செய்வார்கள். எல்லா வேலையும் இறுதியில் சமுதாயத்திற்காகவே செய்யப்படுகிறது. இதை இளைஞர்கள் உணர்ந்து கொண்டால் வேலையின்மை திண்டாட்டம் வராது.


தீண்டாமையை  பாபாசாகேப் அம்பேத்கர் எதிர்க்கிறார். தீண்டாமையை எதிர்க்கவே அம்பேத்கர் இந்து தர்மத்தை கைவிட்டார். ஆனால் அவர் அதற்குப் பதிலாக தேர்வு செய்த மார்க்கம் கவுதம புத்தரின் பெளத்த மார்க்கம். நாம் நமக்குப் பிடித்த மதத்தை பின்பற்றலாம் ஆனால் பிற மதத்தை நாம் சேதப்படுத்தக் கூடாது.


நாட்டில் இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்னர் படையெடுத்து வந்தவர்கள் நம் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை, பாரம்பரியத்தை, நம் நம்பிக்கையை சிதைக்கவில்லை. ஆனால் முஸ்லிம்கள் படையெடுப்பின்போது அவர்கள் நம் நாட்டினை சிதைத்துவிட்டனர். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.