Jammu And Kashmir: ஜம்மு & காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக அந்த யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைப்பதற்கான வழி வகுக்கப்பட்டுள்ளது.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக முறையாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்டோபர் 31, 2019 அன்று ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.






உள்துறை அமைச்சகம் அறிவிப்பு:


இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 (2019 இன் 34) பிரிவு 73 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசியலமைப்பின் 239 மற்றும் 239A பிரிவுகளுடன் படி, யூனியன் பிரதேசம் தொடர்பாக 2019 அக்டோபர் 31 தேதியிட்ட ஆணை ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 இன் பிரிவு 54 இன் கீழ் முதலமைச்சர் நியமிக்கப்படுவதற்கு முன்பே  உடனடியாக ரத்து செய்யப்படும்” என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார்.


உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி


ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 ஆகஸ்ட் 5, 2019 அன்று பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. முந்தைய மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவும் அன்று ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சியும் அமலுக்கு வந்தது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில், தேசிய மாநாட்டு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.


அக்டோபர் 31, 2019 க்கு முன்பு, பிடிபி தலைமையிலான அரசாங்கத்திற்கு பாஜக ஆதரவை வாபஸ் பெற்றபோது, ​​அப்போதைய முதல்வர் மெகபூபா முஃப்தி ராஜினாமா செய்தார். அதன்படி,  ஜூன் 2017 முதல் ஜம்மு&காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.