மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அதில் படுத்துறங்குவதன் மூலம் புற்று நோயாளிகள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரப் பிரதேச அமைச்சரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான சஞ்சய் சிங் கங்வார் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டம் பகாடியா நௌகவான் பகுதியில் பசு காப்பகத்தை திறந்து வைத்து பேசிய அமைச்சர் சஞ்சய் சிங் கங்வார், "திருமண நாள் மற்றும் குழந்தைகளின் பிறந்தநாள் விழாக்களை மக்கள் பசு தொழுவத்தில் கொண்டாட வேண்டும்" என்றார்.
"புற்று நோயை குணப்படுத்தலாம்"
தொடர்ந்து பேசிய அவர், "ரத்த அழுத்த நோயாளி இருந்தால், இங்கு மாடுகள் உள்ளன. அவர்கள் தினமும் இங்கு வந்து காலையிலும் மாலையிலும் பசுவை செல்லமாக வளர்க்க வேண்டும். ஒரு நபர் ரத்த அழுத்தத்திற்கு 20 மில்லிகிராம் மருந்தை எடுத்துக் கொண்டால், இப்படி தினமும் செய்யும் பட்சத்தில், 10 நாட்களுக்குள் 10 மில்லிகிராம் மருந்து எடுத்து கொண்டால் போதும். இது, உண்மை. நான் சொல்கிறேன்.
புற்று நோயாளி, மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்து அங்கேயே தூங்கினால், புற்று நோயைக் கூட குணப்படுத்தலாம். மாட்டு சாணத்தை எரித்தால் கொசு தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே, ஒரு பசு உற்பத்தி செய்யும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
பாஜக தலைவர்கள் இப்படி பேசுவது ஒன்றும் புதிதல்ல. அவர்கள் இப்படி பேசுவது தொடர்கதையாகி வருகிறது. கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, பசுவதை நடப்பதால்தான் கேரளாவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டது என கூறி சர்ச்சையை கிளப்பினார் பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான்தேவ் அஹுஜா.
சர்ச்சை கருத்து தெரிவிக்கும் பாஜக தலைவர்கள்:
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.
ஆனால், அவை இந்த அளவிலான பேரழிவுகளை விளைவிப்பதில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், பசு வதையில் ஈடுபடும் பகுதிகள் இத்தகைய சோகமான சம்பவங்களை எதிர்கொள்வதை நாங்கள் அவதானித்து வருகிறோம். பசு வதையை நிறுத்தாவிட்டால் கேரளாவில் இதுபோன்ற அவலங்கள் தொடரும்" என்றார்.
பாஜக முன்னாள் எம்எல்ஏவின் இந்த கருத்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மனசாட்சி துளியும் இன்றி அவர் இப்படி பேசி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.