இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களமிறங்கியிருந்தனர். இந்தியா முழுவதும் சுமார் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உட்பட 31 இடங்களில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முதல் டெல்லிக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 


இந்நிலையில் இன்று காலை குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுபவர் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வரும் 25ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


வாக்கு எண்ணும் முறை:


குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட உள்ளன. முதலில் நாடாளுமன்ற எம்பிக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் வரிசைப்படி உள்ள முதல் 10 மாநிலங்களின் எம்.எல்.ஏக்கள் பதிவு செய்திருந்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் அடுத்த 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இப்படி அனைத்து மாநிலங்கள் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் அனைத்தும் மாலைக்குள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.


இந்நிலையில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது


முதல் பழங்குடியின வேட்பாளர் திரௌபதி முர்மு:


இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக திரௌபதி முர்மு களமிறங்கியுள்ளார். ஒடிசா மாநிலத்தின் மையூர்கஞ் மாவட்டத்தில் சந்தால் என்ற பழங்குடியின வகுப்பில் தௌரபதி முர்மு பிறந்தார். இவருடைய தந்தை கிராம் குழுவின் தலைவராக இருந்தார். இவர் சிறுவயதில் மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு படிப்பை முடித்தார். 1979 ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இவர் கிளர்காக அரசுத் துறையில் பணியாற்றினார். 









 




அதன்பின்னர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அந்தப் பணியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்தார். அப்போது இவர் சம்பளமே வாங்காமல் அப்பள்ளியில் வேலை செய்தார். அதற்கு அவர்,”நான் செய்வது வேலையில்லை அது ஒரு பொது சேவை. என்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்ள என்னுடைய கணவரின் சம்பளம் மட்டும் போதுமானது” எனத் தெரிவித்திருந்தார். 


1997ஆம் ஆண்டு அரசியலில் இவர் நுழைந்தார். முதலில் ராய்ரங்கப்பூர் பகுதியின் கவுன்சிலராக தேர்வாகினார். அதன்பின்னர் 2000 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார். அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இவர் 2021ஆம் ஆண்டு வரை நீடித்தார். இந்தச் சூழலில் தற்போது அவர் பாஜகவின் ஆதரவு வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண