தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை மறைந்தார். இது தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு நுரையீரல் அழற்சி இருந்ததாகவும் இதனால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்தும் துரதிஷ்டவசமாக இன்று காலை உயிரிழந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலகினர் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரங்கல்: 



தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பக்க பதிவில், “ மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் நடிகருமான விஜயகாந்தின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திரைப்படத் தயாரிப்பிலும் பொதுச் சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தத் துறைகளில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்தார். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான அவரது நேர்மையான அர்ப்பணிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார்.  துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: 






தேமுதிக தலைவர் விஜயகாந்த மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ தேமுதிக தலைவரும், தமிழ் திரையுலகில் மூத்த நடிகருமான விஜயகாந்த் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். கேப்டன் என்று அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் தனது திரை மற்றும் ஆஃப்ஸ்கிரீன் பாத்திரங்கள் மூலம் மக்களிடையே தேசபக்தியை தூண்டினார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி ஷாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.