குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக போட்டியிடும் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு இன்று (ஜூன்.24) வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் வேட்பு மனுவுக்கு ஆளும் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
முர்மு வேட்புமனு தாக்கல்
முன்னதாக திரௌபதி முர்மு மனு தாக்கல் செய்தபோது பிரதமர் மோடி, மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் நட்டா, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். வேட்பு மனுவை மோடி முதல் ஆளாக முன் மொழிய தேர்தல் அலுவலர் பி.டி. மோடி அதைப் பெற்றுக் கொண்டார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பாக மூத்த தலைவர்கள் ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரை, ஜக்கிய ஜனதா தளம் சார்பாக ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது உடனிருந்தனர்.
சோனியா, மம்தாவிடம் ஆதரவு கோரிய முர்மு
இந்த நிலையில், திரௌபதி முர்மு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் ஆதரவு கோரியுள்ளார். இவர்களை தொலைபேசியில் அழைத்து முர்மு ஆதரவு கோரிய நிலையில், இந்த மூவரும் முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஒடிசாவின் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரான முர்மு, 2015 முதல் 2021 வரை பதவி வகித்தார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சி சார்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார். ஜூன் 27ஆம் தேதி, அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 18ஆம் தேதி, குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தவிர்த்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்