ராக்கெட்ரி திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை அடுத்து படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் மாதவன் நேற்று பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய களம் 32-வது முறையில்தான் வெற்றிபெற்றது என்றும் அதற்கான நேரம் பார்க்க பஞ்சங்கத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திர மற்றும் கோள்களின் வரைபடம்தான் (celestial map) இந்தியக் குழுவுக்கு உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


அவரின் இந்தக் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை ரஷ்யா, சீனா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து ஒட்டுமொத்தமாகச் செவ்வாய் கிரகத்துக்கு 48 களங்கள் அனுப்பட்டபட்டுள்ளன. அதில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மட்டுமே 43 களங்களை அனுப்பியுள்ளது. இதற்கிடையேதான் இந்தியாவின் செவ்வாய் கிரக ப்ராஜெக்ட் குறித்து மாதவன் இவ்வாறு கூறியுள்ளார். இந்தத் தகவலை நம்பி நாராயணனின் மருமகனும் விஞ்ஞானியுமான அருணன் தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.



அவர் இயக்கிய ராக்கெட்ரி படம் வருகின்ற ஜூலை முதல்நாளில் வெளியாக உள்ள நிலையில் ஏற்கெனவே கான்ஸ் திரைப்பட விழாவில் இது திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விண்வெளி விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


படத்தின் புதிய ட்ரெய்லர் ஒன்றும் நேற்று வெளியிடப்பட்டது. அடுத்த படம் ஏதும் இயக்கும் திட்டம் இருக்கிறதா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “அதற்கு அந்தக் கதை உண்மையிலேயே என்னை ஈர்க்க வேண்டும். நான் ஒன்றும் மணிரத்னம் கிடையாது நேர்த்தியாகப் படம் எடுப்பதற்கு. சிலகாலம் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறேன். அதையேதான் என் மனைவி சரிதாவும் என்னிடம் சொன்னார்” என்றார்.