திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடை இல்லை என்றும் சிபிஐ, காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் அதன் விசாரணையை சிபிஐ இயக்குநர் கண்காணிப்பார் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லட்டு நெய்யில் விலங்குக் கொழுப்புகள்
உலகப் புகழ்பெற்ற திருக்கோயிலான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் பிரசாதமும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் திருப்பதியில் வழங்கப்பட்ட லட்டுகளில், அதாவது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றம் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக இப்போதைய முதல்வர் சந்திர பாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவஸ்தானமும் இதை ஒப்புக்கொண்ட நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது. திருப்பதியின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக கூறி தோஷ பரிகாரமாக மகா சாந்தி ஹோமமும் நடத்தப்பட்டது. துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் விரதம் இருந்தார்.